ஒட்டாவா,
பஹாமஸ் தீவுகளை சூறையாடிய டோரியன் புயல் கனடாவில் கரையைக் கடந்தது. மணிக்கு 155 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக் காற்றுடன் கரையைக் கடந்தது.
கரீபியன் தீவுக்கு அருகே அண்மையில் சக்தி வாய்ந்த புயல் உருவானது. இதற்கு டோரியன் எனப் பெயரிடப்பட்டது.
டோரியன் புயல் வலுவடைந்து அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பஹாமாஸ் தீவுகளை மிகக் கடுமையாக தாக்கியது. டோரியன் புயலால் பஹாமஸ் தீவில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பின்னர் இந்தப் புயல் கனடா நோக்கி நகர்ந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு கனடாவின் ஹெலிஃபேக்ஸ் நகரில் கரையைக் கடந்தது. அப்போது கடலில் 20 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. நோவா ஸ்காட்டியா பகுதியில் 100 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது. 4,50,000 வீடுகளுக்கு மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் ரேல்ஃப் குட்டேல் தெரிவித்துள்ளார்.