சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை முழுவதுமாக வாபஸ் பெற ஹாங்காங் நிர்வாக இயக்குனர் கேரி லேம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெறும் இந்தப் போராட்டம் காரணமாக ஹாங்காங்கின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹாகாங் நிர்வாக இயக்குனர் கேரிலேம் பதவியை விட்டு விலகுமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இதற்கு, ”நான் ராஜினாமா செய்வது குறித்து சீன அரசுடன் இதுவரை பேசவில்லை. ராஜினாமா செய்வது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நானும் எனது குழுவும் ஹாங்காங்கிற்கு உதவுவதற்காக பதவியில் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஹாங்காங்கை மீட்டு வழி நடத்த முடியும் நிச்சயம் ஹாங்காங்கை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம்” என்று கேரி லேம் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் இந்த போராட்டங்கள் காரணமாக ஹாங்காங்கின் தொழிலதிபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹாங்காங் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக வாபஸ் பெற ஹாங்காங் நிர்வாக இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.