ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிபில் 16 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அரசின் உள்துறை அமைச்சகம் கூறும்போது, “ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள கீரின் வில்லேஜ் இடத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றில் திங்கட்கிழமை இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 16 பேர் பலியாகினர்.
50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் 400க்கும் அதிகமான வெளி நாட்டினர் அப்பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஐந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் வெளி நாட்டினர் வேறு இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பரில் ஆப்கான் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொடர்ந்து அங்கு தீவிரவாதத் தாக்குதல் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில் தலிபான்கள் மற்றும் ஆப்கன் அரசு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது.