உலகம்

கிரீஸில் பத்திரிகைகளை அச்சடிக்கும் காகிதத்துக்கு தட்டுப்பாடு

ராய்ட்டர்ஸ்

கிரீஸில் இயங்கும் பல பத்திரிகை நிறுவனங்களில் அச்சடிப்பதற்கான காகிதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வங்கிகள் செயல்பட்டால் மட்டுமே இவை இயங்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

கிரீஸ் நாட்டிலிருந்து வெளியாகும் 'எம்ப்ரொஸ்' அந்நாட்டில் அதிகம் விற்பனை ஆகும் பத்திரிகை நிறுவனமாகும். இந்தப் பத்திரிகையின் பக்கங்கள் 20-திலிருந்து 16 ஆக குறைக்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாகி மனோலிஸ் மெனோலாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "நிதி தட்டுப்பாடு நிலவும் நிலையில், பத்திரிகைகளை அச்சடிப்பதற்கான காகிதங்களின் இருப்பு கைவசம் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட காகிதங்கள் அனைத்தும் சுங்கத் துறையைத் தாண்டி வரவில்லை.

வங்கிப் பரிவர்த்தனைகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது. கைவசம் ரொக்க பணம் போதுமான அளவில் இல்லை. வங்கிகள் செயல்பட்டால் மட்டுமே தேவையான பணத்தை பெறவும் முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல மற்றொரு முன்னணி பத்திரிகையான 'டா நீ'-யும் கடந்த ஜூலை முதல் தேதியிலேயே காகிதம் இருப்பு இல்லை என்பதை தெரிவித்தது.

தமது பத்திரிகையில், "நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் 32 பக்கங்கள் கொண்ட இந்த பத்திரிகை, அடுத்தடுத்த நாட்களுக்கு இதே நிலையில் இருக்குமா என்பது தெரியவில்லை. காகிதங்களை வாங்கக் கூடிய சூழல் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று செய்தியாகவே குறிப்பிட்டது.

SCROLL FOR NEXT