உலகம்

தாக்குதல் நடைபெற்றதற்கான தடயத்தை அழித்து விடுவார்கள்: சிரிய ரசாயனத் தாக்குதலில் இரட்டைக் குழந்தைகளை இழந்த தந்தை

செய்திப்பிரிவு

அப்தில் ஹமித் அல் யூசஃப் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது இரட்டைக் குழந்தைகளை சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் பறிகொடுத்து தனது கரங்களில் இரு குழந்தைகளையும் சுமந்த வந்த புகைப்படம் உலகையே சற்று கலங்கச் செய்தது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இதில் இறுதிப் போர் இட்லிப்பில் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஷேகோன் நகரில் சிரிய அதிபர் பஷார் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யா உதவியுடன் ரசாயனத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பிறந்து சில மாதங்கள் ஆன தனது இரட்டைக் குழந்தைகளையும், தனது மனைவியையும் இழந்தார் ஹமித்.

இறுதிச் சடங்கில் கையில் குழந்தைகளின் சடலங்களை கையில் தாங்கிக் கொண்டிருந்த ஹமித் புகைப்படம் அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சிரியாவின் உள் நாட்டுப்போரை உலக நாடுகளை கூடுதலாக கவனிக்கச் செய்தது.

இந்தப் பேரழிவிலிருந்து மீண்ட ஹமித், மறுமணம் செய்துகொண்டு தற்போது தனது சொந்தங்களைக் காண சிரியாவின் ஷேகோன் நகருக்கு வந்திருக்கிறார்.

இதுகுறித்து ஹமித் கூறும்போது, “ என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முக முக்கியமான சொந்தங்களை நான் இங்கு புதைத்திருக்கிறேன். அவர்களது கல்லறைக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை வருவதன் மூலம் எனது மனதிற்கு அமைதி கிடைக்கிறது. ஆனால், எனக்குள் தற்போது ஒரு பயம் இருக்கிறது. ஷேகோன் நகரை பஷாரின் அரசுப் படைகள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்ட பின்னர் இங்கு ரசாயனத் தாக்குதல நடைபெற்றதற்கான அடையாளத்தை அழித்து விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டிய நிலையில் இந்தக் குற்றச்சாட்டை சிரியா மற்றும் ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும் இது தொடர்பான விவாதம் ஜக்கிய நாடுகள் சபை வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT