இஸ்லாமாபாத்,
காஷ்மீர் பிரச்சினையில் அமைதியின் வழியில் சமரச பேச்சுவார்த்தை மூலமான தீர்வையே விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குரேஷி, "தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. அண்டை நாடுகளுடன் அமைதியான நல்ல உறவை பாதுகாக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.
இதனை கருத்தில் கொண்டே பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச அளவில் பெயர் பெற்றது.
காஷ்மீரி மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இந்தியப் படைகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுமூலம் பிராந்திய சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். சர்வதேச சமூகமும் ஏன் இந்தியாவில் உள்ள சிலரும் கூட மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர்.
நமது இன்றைய பெரும் சவாலே இந்துத்துவா கொள்கைக்கு எதிராக எழுந்து நின்று காஷ்மீரி மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு அரசியல், ராஜதந்திர ரீதியாக மட்டுமல்லாமல் உணர்வளவிலும் கை கொடுப்பதே. இதனை செய்யும்போது அமைதியையும் நிலைநாட்ட வேண்டும்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதில் பாகிஸ்தான் பொறுப்புடனேயே செயல்பட்டிருக்கிறது. அதேவேளையில் மிகவும் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கான ரயில், பேருந்து சேவையை நிறுத்தி நாம் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு தனித் தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
கடந்த 4-ம் தேதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட 400 அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தொலை தொடர்பு சேவை இன்றளவிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார். காஷ்மீர் பிரச்சினைக்காக பாகிஸ்தான் முதலில் போர் தொடுக்காது என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்த நிலையில் அமைதியின் வழியில் தீர்வு கோரும் வெளியுறவு அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
- ஏஎன்ஐ