உலகம்

ஹாங்காங்கில் நாடாளுமன்றத்தின் வெளியே பெட்ரோல் குண்டுகளை வீசிய போராட்டக்காரர்கள்

செய்திப்பிரிவு

ஹாங்காங்கில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாங்காங்கில் இன்று போராட்டம் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்ட அரசாங்க கட்டிடங்களில் தடையை மீறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஹாங்காங் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும்,
மேலும் நாடாளுமன்றத்தைச் சுற்றியிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் தகர்த்ததாகவும் ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளும் இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை ஹாங்காங் போராட்டக் கலவரங்களில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சமூகச் செயற்பாட்டாளர் ஜோஷ்வா வாங் உள்ளிட்ட சிலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இது போராட்டக்காரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

SCROLL FOR NEXT