சவுதியின் அபா விமான நிலையத்தை ஏமனின் ஹாவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்த செய்தியை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் அல் மசிராஹ் டிவி உறுதிப்படுத்தியுள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு, பலர் உணவில்லாமல் பஞ்சத்தில் தவித்ததால் சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பகுதியியில் சவுதி அரசு வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சவுதி பகுதிகளில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் சவுதியின் அபா விமான நிலையத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து சவுதி இதுவரை பதிலளிக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக சவுதியின் அபா விமான நிலையத்தில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.