மின்சாரக் கட்டணம் செலுத்தாத பாக். பிரதமர் அலுவலகத்தின் இணைப்பைத் துண்டிக்கப் போவதாக மின் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின்சாரக் கட்டணம் செலுத்தாது குறித்து இஸ்லமாபாத் மின்சார விநியோக நிறுவனம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், ”பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் சுமார் ரூ.40 லட்சம் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாமல் உள்ளது. கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.35 லட்சம் மின்சாரக் கட்டணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செலுத்தவில்லை. இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பியும் பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்ந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் ஒமர் ஆயுப் கூறுகையில், ''பாகிஸ்தானில் சுமார் 22 ஆயிரம் - 24 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் மின்சாரத் தேவை ஒவ்வோர் ஆண்டும் 5% அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படிப்படியாக மின் தட்டுப்பாடு சரி செய்யப்படும்'' என்றார்.
தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். மேலும் பதவி ஏற்றது முதல் பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்பட்ட ஆடம்பரமான சலுகைகளை இம்ரான் கான் தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவரது அலுவலகத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.