கேஎஃப்சி, அமெரிக்காவில் தனது ஒரே ஒரு கிளையில் மட்டும் சைவ சிக்கனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரபல உணவகச் சங்கிலி நிறுவனமான கேஃப்சி அட்லாண்டாவில், சிக்கனுக்கு மாற்றாக, அதே சுவையை அளிக்கக்கூடிய, செடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சைவ சிக்கனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. பியாண்ட் மீட் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த உணவை கேஎஃப்சி உருவாக்கியுள்ளது.
இந்த சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை ஒரே ஒருநாள் மட்டும் தான் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.30க்கு திறக்கப்படும் கடைக்கு முன், 8 மணியிலிருந்தே வரிசை கட்டி வாடிக்கையாளர்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு கார் வரிசையும் நீளமானது. கடை திறந்து விற்பனை ஆரம்பித்த ஐந்து மணி நேரத்தில், அனைத்து 'சைவ சிக்கன்' உணவுகளும் தீர்ந்து போயின.
''எங்கள் கடையில் ஒரு வாரத்தில் நாங்கள் விற்கும் சிக்கன் பாப்கார்ன் அளவுக்கு, ஐந்தே மணி நேரத்தில் இந்த 'சைவ சிக்கன்' விற்றுத் தீர்ந்துவிட்டது'' என கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார். சைவ சிக்கனை ருசித்த பல வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படம் எடுத்துப் போட்டு, உணவைப் பாராட்டியுள்ளனர். மேலும், ஃப்ரைட் சிக்கனுக்கு ஈடு இணையான சுவை இதில் கிடைக்கிறது என்றும் புகழ்ந்துள்ளனர்.
இதில் கிடைக்கும் வரவேற்பைக் கொண்டு மற்ற கிளைகளிலும் இந்த உணவை விற்க கேஎஃப்சி திட்டமிட்டுள்ளது.