உலகம்

உலகை ஆடச் செய்தவன் - மைக்கேல் ஜாக்ஸன் பிறந்த நாள் இன்று!

செய்திப்பிரிவு

உலகெங்கும் எத்தனையோ இசைக் கலைஞர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் மைக்கேல் ஜாக்ஸன் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. கடைக்கோடி கிராமம் தொடங்கி வளர்ச்சியடைந்த நகரங்கள் வரை மைக்கேல் ஜாக்ஸனால் ஈர்க்கப்படாதவர்கள் யாருமே இல்லை.

தனது நடன அசைவுகள் மூலம் சிறுவர் முதல் பெரியவர் வரை கட்டிப்போட்ட ஆளுமை. பிரபுதேவா உட்பட பல்வேறு நடனக் கலைஞர்களின் நடனத்தில் ஜாக்ஸனின் பாதிப்பை இன்றும் உணர முடியும். இசை, நடனம் மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் மைக்கேல் ஜாக்ஸன்.

இன்று நடனக்கலைஞர்கள் பலரும் செய்யும் பிரபலமான 'மூன்வாக்’ என்ற நடன அசைவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்ஸன்தான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு இன்று 60-வது பிறந்த நாள்.

மைக்கேல் ஜாக்ஸன் 1958-ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேத்தரின் எஸ்தர் ஜாக்ஸன், ஜோசப் ஜாக்ஸன் கறுப்பினத் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். கிதார் கலைஞரான ஜாக்ஸனின் தந்தை ஜோசப் மிகவும் கண்டிப்புடன் குழந்தைகளை வளர்த்தார்.

கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில் தனது குழந்தைகள் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். இரவும் பகலும் அவர்களுக்குப் பயிற்சியளித்தார்.

1964-ம் ஆண்டு தனது மகன்களைக் கொண்டு ஜாக்ஸன் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கினார் ஜோசப். அடுத்த ஆண்டே அது ஜாக்ஸன் 5 என்று பெயர் மாற்றப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக மைக்கேல் என்ற சிறுவனின் தனித்துவம் வாய்ந்த குரலும், நடன அசைவுகளும் அமெரிக்கர்களிடையே மெல்ல பிரபலமடையத் தொடங்கியது. குறிப்பாக விமர்சகர்கள் அவரை ‘மேதை’ என்று குறிப்பட்டனர். தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தாலும் ஜாக்ஸனின் பால்ய காலம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை.

பயிற்சியின்போது தனது தந்தையிடம் தினமும் அடி வாங்கினார். பின்னாட்களில் இது குறித்து ஒரு பேட்டியில் ஜாக்ஸன் கூறும்போது, “என்னுடைய இந்த வெற்றிக்கு தந்தையின் கண்டிப்பும் ஒரு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது 14-ம் வயதில் முதல் சோலோ ஆல்பத்தை வெளியிட்டார் ஜாக்ஸன். அதன் பிறகு பல்வேறு சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருந்தாலும் 1979-ம் ஆண்டு ஜாக்ஸன் வெளியிட்ட ‘ஆஃப் த வால்’ என்ற ஆல்பம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

அவரது அடுத்த ஆல்பமாக 1983-ம் ஆண்டு வெளியான ‘த்ரில்லர்’ ஆல்பம் பாப் இசை உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து 37 வாரங்கள் விற்பனையில் முதலிடத்தில் இருந்த 'த்ரில்லர்' உலகமெங்கும் 49 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.

இன்று வரை உலகமெங்கும் 110 மில்லியன் பிரதிகள் விற்று முதலிடத்தில் ‘த்ரில்லர்’ ஆல்பம் நீடித்து வருகிறது. ‘திரில்லர்’ ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்களில் ‘பீட் இட்’ பில்லி ஜீன்’ ஆகிய பாடல்கள் இன்றுவரை உலகெங்கும் இளைஞர்கள் மத்தியில் பாடப்படும், ரசிக்கப்படும் பாடல்களாக உள்ளன.

1983-ம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில் ‘Yesterday, today and forever’ என்ற ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த ஜாக்ஸன், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நடன அசைவை வெளிப்படுத்தினார். ஆம் அதுதான் ’மூன்வாக்’. அன்று வரை இசைக்காக மட்டும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த ஜாக்ஸன் அன்றுமுதல் நடனத்துக்கும் அடையாளம் ஆனார்.

80-களின் இறுதியில் மைக்கேல் ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தோற்றம் குறித்த கற்பனைக் கதைகள் உலா வரத்தொடங்கின. தனது மூக்கையும் தாடையையும் சரி செய்ய ஜாக்ஸன் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். 80-களில் அவருடைய நிறத்தில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. ஜாக்ஸனின் தோல் வெள்ளையாக மாறத் தொடங்கியது.

இது குறித்து ஜாக்ஸன் ஒரு பேட்டியில் தனக்கு ஒருவித தோல் நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால்தான் சரும நிறம் மாறுவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவருடைய தோற்றம் பற்றிய வதந்திகள் குறைந்தபாடில்லை.

உதாரணமாக, ஜாக்ஸன் தன்னுடைய தோலை ப்ளீச் செய்வதாகவும், தனக்கு வயதாகக் கூடாது என்பதற்காக ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட கூடாரத்தில் தினமும் உறங்குவதாகவும் அன்றைய பத்திரிக்கைகள் எழுதின.

1993-ம் ஆண்டு 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜாக்ஸன் குற்றம் சாட்டப்பட்டார். கிட்டத்தட்ட 1 வருடம் நடந்த இந்த வழக்கை, எந்த ஆதாரமும் இல்லையென்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டு ஜாக்ஸனை உடலளவிலும் மனதளவிலும் பெருமளவு பாதித்தது. ஒப்பந்தம் செய்த நிகழ்ச்சிகளை உடல் நிலையைக் காரணம் கூறி ரத்து செய்தார்.

1993-ம் ஆண்டு மே மாதம் லிசா மேரி என்றை பெண்ணைத் திருமணம் செய்தார் மைக்கேல் ஜாக்ஸன். ஒன்றரை வருடமே நீடித்த அவர்களது திருமண வாழ்வு 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. பாலியல் குற்றச்சாட்டை மறைக்க ஜாக்ஸன் நடத்திய நாடகமே இந்தத் திருமணம் என்று ஒரு குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

அதன் பிறகு 1996-ம் ஆண்டு டெபாரா ரோவ் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் சிட்னியில் ஜாக்ஸனின் ’ஹிஸ்டரி’ என்ற ஆல்பம் வெளியீட்டின் நடுவே நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. 1999-ம் ஜாக்ஸனை விட்டுப் பிரிந்து சென்ற டெபாரா தனது இரு குழந்தைகளையும் ஜாக்ஸனிடமே விட்டுச் சென்று விட்டார்.

அதன் பிறகு மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருந்த மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு இடி இறங்கியது. 2003-ம் ஆண்டு மற்றொரு சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாக்ஸன் கைது செய்யப்பட்டார். 14 வாரங்கள் நடந்த இந்த வழக்கிலிருந்து 2005-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் ஜாக்ஸனை உடல், மன ரீதியாகப் பாதித்தது மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த வழக்குகளை எதிர்கொள்ள அவர் தனது நெவர்லேண்ட் எனப்படும் 10.93 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை விற்க வேண்டியிருந்தது.

இந்த இழப்புகளைச் சரிகட்ட 2009-ம் ஆண்டு ’திஸ் இஸ் இட்’ என்ற ஒரு மிகப்பெரிய இசை நிகழ்ச்சிக்காக மைக்கேல் ஜாக்ஸன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி மூலம் இழந்த தனது செல்வாக்கு, பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

உலகமே அவரது இசை நிகழ்ச்சியைக் காண ஆவலாக இருந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள கோடானுகோடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த இசை நிகழ்ச்சிக்கு சில வாரம் முன்பு எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஜாக்ஸனின் உயிர் பிரிந்தது.

இறக்கும்போது அவருக்கு வயது ஐம்பது. ஜாக்ஸன் இறந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியது. எந்த அளவுக்கு என்றால் கூகுள், விக்கிபீடியா, ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களின் ட்ராஃபிக் 11 முதல் 20 சதவீதம் உயரும் அளவுக்கு. அனைத்து தளங்களும் முடங்கும் அளவுக்கு அந்தச் செய்தி இருந்தது.

ஜாக்ஸன் இறந்தபோது அவருடைய அந்த ஆண்டு வருமானம் மட்டும் 9 கோடி டாலர்கள். இயல்பிலேயே பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1981-ம் ஆண்டு நடந்த தன்னுடைய ஒரு நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த ஒரு லட்சம் டாலர்களை அட்லாண்டாவில் உள்ள குழந்தைகள் அறக்கட்டளைக்குத் தானமாகக் கொடுத்தார். அதே போல 1984-ம் ஆண்டு தான் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியின் 1200 டிக்கெட்டுகளுக்கான தொகையான 39,000 அமெரிக்க டாலர்களை தெருவோரச் சிறுவர்களுக்காக நன்கொடையாக அளித்தார்.

’உங்கள் தந்தை விசித்திரமான மனிதர் இல்லை. அவர் சமாளித்த விஷயங்கள் விசித்திரமானவை. ஆனால் அவர் அதையெல்லாம் சமாளித்தார்’ - இது ஜாக்ஸனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அவரது குழந்தைகளிடம் ஜாக்ஸனின் நண்பர் அல் ஷார்ப்டன் கூறிய வார்த்தைகள்.

வெற்றிகளாலும் புகழாலும் அலங்கரிக்கப்பட்ட ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கை சோகத்தால் நிரம்பியது. சர்ச்சைகள் சூழ வாழ்ந்த அந்தக் கலைஞன் ஏற்படுத்திய அதிர்வலைகள் பூமியின் ஏதோவொரு மூலையில் என்றென்றும் எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகை ஆட்சி செய்த மைக்கேல் ஜாக்ஸனின் நாற்காலி இன்னும் காலியாகவேதான் இருக்கிறது.

SCROLL FOR NEXT