பெய்ரூட்
லெபனானில் தஞ்சம் புகுந்த சிரியாவைச் சேர்ந்த 2477 அகதிகளை வலுக்கட்டாயமாக போர் நடைபெறும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் அரசு ஆதரவுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் போரால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து வாழமுடியாத சூழலினால் பல லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சுமார் 4.5 மில்லியன் மக்களைக் கொண்ட லெபனான் நாட்டில் சுமார் 1.5 மில்லியன் சிரிய மக்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறுகிறது, அவர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் ஐ.நா.வினால் பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆவர்.
ஜூன் மாதத்திலிருந்து, 3,600 க்கும் மேற்பட்ட சிரிய குடும்பங்கள் தங்கியிருந்த அர்சலின் கிழக்கு பிராந்தியத்தில் அவர்களது தங்குமிடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அழிக்கப்பட்ட அகதி முகாம்கள்
இந்த மாதத் தொடக்கத்தில், ராணுவம் லெபனானின் வடக்கில் மேலும் 350 அகதி முகாம் கட்டுமானங்களை அழித்ததுடன், வசிப்பிட ஆவணங்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான மக்களை கைது செய்ததாக மனிதாபிமான குழுக்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தொழிலாளர் அமைச்சகம் அனுமதி இல்லாமல் வந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நீக்கி வருகிறது, இந்த நடவடிக்கையால் பெரும்பாலும் சிரிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்குழு தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், லெபனான் அரசு, கடந்த 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த அகதிகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது. லெபனான் அரசின் பொது பாதுகாப்புத் துறை இந்த உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மே 13 அன்றுமுதல் லெபனானில் தஞ்சம் புகுந்த சிரிய அகதிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அம்னஸ்டியின் மத்திய கிழக்கு ஆராய்ச்சி இயக்குநர் லின் மாலாஃப் கூறுகையில்,
“வாழவே முடியாத போர் சூழலில் இருந்து தஞ்சம் தேடி சிரிய அகதிகள் பலர் லெபனானுக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் தற்போது அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
லெபனானில் தஞ்சம் புகுந்த சிரியாவைச் சேர்ந்த அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை மேமாதம் தொடங்கி கடந்த ஆகஸ்ட் 9 வரை 2477 அகதிகள் போர்நடைபெறும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக நுழைந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. எனவே, இந்த நாடுகடத்தல்களை அவசர அவசரமாக நிறுத்துமாறு லெபனான் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு நாட்டில் புகலிடம் கோரும் அதிகள் தங்கள் நாட்டில் ''நாடு, மதம், தேசியம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது அரசியல் கருத்து" ஆகியவற்றின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும்போதுதான் அங்கிருந்து தஞ்சம் கோரி வருகிறார்கள்.
அவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை ''நான் ரீபோல்மெண்ட் ஆப்ளிகேஷன்ஸ்'' எனப்படும் ''திருப்பி அனுப்பாத கடமை'' என்ற சர்வதேச சட்டம் தடுக்கிறது. இந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை லெபனான் வெளிப்படையாக மீறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் மற்ற சிரமங்களையெல்லாம் கூறி லெபனான் அரசியல்வாதிகள் வழக்கமாக குற்றச்சாட்டுகளை அகதிகள் மீதே சுமத்துகிறார்கள். இதன்மூலம் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான அழுத்தத்தை மிக அதிகமாகவே அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளால் அகதிகளின் வாழ்க்கையில் மேலும் துயரங்கள் பெருகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்''
இவ்வாறு அம்னஸ்டியைச் சேர்ந்த லின் மாலாஃப் தெரிவித்தார்.