இஸ்லாமாபாத்
காஷ்மீர் பறிபோய் விட்டது, ஆக்கிரமிப்பு காஷ்மீரையாவது தக்க வைக்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப்பெற்றது. மேலும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக உறவை முறித்துக்கொண்ட பாகிஸ்தான், பஸ், ரயில் போக்குவரத்தையும் ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறங்கினார். ஆனால், பாகிஸ்தான் பேச்சுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை.
இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அந்நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ காட்சி ஒன்று பாகிஸ்தானில் பெரிய அளவில் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் அவர் கூறுகையில் ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் முழுமையாக தோல்வியடைந்து விட்டார். இந்திய பிரதமர் மோடி காஷ்மீரை சட்டப்படியாக இந்தியாவுடன் இணைத்த விட்டார்.
இது இருநாடுகள் பிரச்சினை என ட்ரம்ப் கைவிரித்து விட்டார். இந்த விவகாரத்தை பற்றி பேசக் கூட ஜி7 நாடுகள் கூட்டத்தில் வாய்ப்பு ஏற்படவில்லை. எந்த நாடும் இந்தியாவை கண்டிக்கவில்லை. காஷ்மீரும், அதன் தலைநகர் ஸ்ரீநகரும் நம்மிடம் இருந்து பறி போய் விட்டது.
மீதம் நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) அதன் தலைநகரான முசபராபாத்தையும் மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இதற்காவது இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடுவதை மட்டுமே அவர் ஒரே பணியாக செய்து வருகிறார்’’ என பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.