உலகம்

‘‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை’’ - ட்ரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

பாரிஸ்
ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் மத்தியஸ்தம் தேவையில்லை என அப்போது பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார்.

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மீண்டும் பிரான்ஸ் திரும்பிய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் அங்கு நடைபெறும் ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை எனினும் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்றுள்ளளது. மேலும் ஜப்பான், பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

ஜி 7 மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் பிரச்சினைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை ட்ரம்ப் கூறியிருந்தார். இதுபற்றி பிரதமர் மோடியை சந்திக்கும்போது பேசுவதாகவும் கூறியிருந்தார். எனவே இதுபற்றி இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுமட்டுமின்றி உலக அளவில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பெரிய அளவில் வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இதனால் உலக பொருளாதாரமே சுணக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது. இதுபற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில் ‘‘இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக என்னுடன் பேசினார். அப்போது காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறினார். எங்களை பொறுத்தவரை இருநாடுகளுமே எங்களுக்கு நண்பர்கள். காஷ்மீர் பிரச்சினையை இருநாடுகள் தொடர்புடையது. தங்களுக்குள் உள்ள பிரச்சினையை இருநாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ எனக் கூறினார்.
அதுபோலவே பிரதமர் மோடி கூறுகையில் ‘‘காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எந்த நாட்டிற்கும் தலைவலியை கொடுக்க விரும்பவில்லை. எனவே மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை. இது முழுக்க முழுக்க இருநாடுகள் தொடர்பானவை’’ எனக் கூறினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT