தேசப்பிதா மகாத்மா காந்தியின் ஆளுயர உருவச் சிலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரில் அமைக்கப்பட உள்ளது. அந்நகரில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் காந்தி சிலை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கை விரைவில் ஈடேற உள்ளது.
7 அடி உயரம், 30 அங்குல அகலத்தில் காந்தியின் வெண்கலச்சிலை ஆந்திரத்தில் வடிக்கப்பட்டது. அந்த சிலை 6 அடி உர பீடம் அமைத்து அதன் மேல் நிறுவப்படும். இந்த சிலைக்கு பின்புலமாக பளிங்கு சுவர் அமைக்கப்பட்டு அதில் காந்தியின் பொன்மொழிகளும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மன்டேலா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களின் சிறந்த உரைகளின் மேற்கோள்களும் பொறிக்கப்படும்,
மகாத்மா காந்தி நினைவு மண்டப வளாக கட்டுமானப் பணி தொடக்கவிழா இர்விங் நகரில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பூங்காவில் கடந்த வாரம் நடைபெற்றது.
அரசு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தியும் இதற்காக நிதி திரட்டும் அரும் பணியையும் ஆற்றிய இந்திய அமெரிக்கர்கள் இடம்பெற்ற பல்வேறு அமைப்புகளின் முழு முயற்சியால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இர்விங் நகர மேயர் பேத் வான் டைன் பங்கேற்றார். கடைக்கால் தோண்டும் நிகழ்ச்சியில் ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பார்வதி னேனி ஹரீஷ் பங்கேற்றார்.