உலகம்

ஹாங்காங் போராட்டத்தை தவறாகச் சித்தரித்த 2,000 ‘ஐடி’க்கள் நீக்கம்: ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஹாங்காங் போராட்டத்தையும், போராட்டக்காரர்களையும் தவறாகச் சித்தரித்த 2,000க்கும் அதிகமான ட்விட்டர் ஐடிகளை நீக்கம் செய்துள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங் சுமார் 150 ஆண்டுளுக்கும் மேலாக பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனாலும் அதற்கென தனி கரன்சி, கலாச்சார அடையாளம், அரசியல் நடைமுறை ஆகியவை உள்ளன. அங்குள்ள மக்கள் தங்களை சீனர்களாகவே கருதுவதில்லை. ஹாங்காங்கியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் சட்ட நடைமுறைகள் பிரிட்டனின் மாதிரியைப் பிரதிபலிக்கின்றன. ‘ஒரு நாடு, 2 நடை முறைகள்’ என்ற கொள்கையே இதன் தனிச்சிறப்பாக உள்ளது. இதன்படி, அங்கு ஹாங்காங் அடிப்படைச் சட்டம் அமலில் உள் ளது. போராட்ட உரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை எல்லாம் இது உறுதி செய்கிறது. ஆனால், இந்த உரிமைகள் எல்லாம் சீனாவிலேயே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான உரிமையை ஹாங்காங் அடிப்படைச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், ஜனநாயக உரிமையை வழங்க சீனா மறுத்து வருகிறது. ஹாங்காங் சட்டத்துக்குப் புது விளக்கம் அளித்து வருகிறது. அதாவது ஹாங்காங் முழுவதும் தங்கள் எல்லைக்குட்பட்டதுதான் எனக் கூறி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்துசெய்யக் கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் 3 மாதத்துக்குக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஹாங்காங்கில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். ஹாங்காங் மக்களின் இந்த மாபெரும் ஜனநாயகப் பேரணியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர்.

இதனிடையே ஹாங்காங்கில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை தவறாகச் சித்தரிக்கும் வகையில் செயல்பட்ட 2,000க்கும் அதிகமான ட்விட்டர் ஐடிகள் நீக்கப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் திங்கட்கிழமை கூறும்போது, ''ஹாங்காங் போராட்டக்காரர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்த ட்விட்டர் ஐடிக்கள் நீக்கப்பட்டன, இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ட்விட்டர் ஐடிக்களை சீனா இயக்கியதாகவும் இது தொடர்பான விசாரணையில் ட்விட்டர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT