இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் ஜாகீர் நாயக் :கோப்புப்படம் 
உலகம்

மலேசியாவில் ஜாகீர் நாயக்குக்கு வலுக்கும் எதிர்ப்பு: 7 மாநிலங்களில் பேசத் தடை; என்ன காரணம், நாடு கடத்தப்படுவாரா?

செய்திப்பிரிவு

கோலாலம்பூர்,

இஸ்லாமிய மதப்பிரச்சாரம் செய்யும் ஜாகீர் நாயக், இன வேறுபாட்டைத் தூண்டும் வகையில் பேசியதையடுத்து அவர் மலேசியாவில் 7 மாநிலங்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் நாயக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தரக் குடியுரிமையையும் ரத்து செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்தவும் குரல் எழுந்துள்ளது.

ஜாகீர் நாயக் மீது இந்தியாவில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கும், என்ஐஏ தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஆனால், மலேசியாவில் கடந்த 3 ஆண்டுகளாக ஜாகீர் நாயக் வாழ்ந்து வருகிறார். அந்த நாடு அவருக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் ஜாகீர் நாயக் மதப்பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் மலேசியாவில் வாழும் இந்துக்கள், சீனர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அதில், " இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் பெறும் உரிமையைக் காட்டிலும், மலேசியாவில் வாழும் இந்துக்கள் 100 சதவீதம் அதிகமான உரிமையைப் பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் மலேசியப் பிரதமரை ஆதரிக்கவில்லை, இந்தியப் பிரதமரைத்தான் ஆதரிக்கிறார்கள்.

என்னை விருந்தினர் என்று அழைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த நாட்டின் பழைமையான விருந்தாளி சீனர்கள்தான். புதிய விருந்தாளி நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கோரினால் முதலில் பழைய விருந்தாளிகள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும். பெரும்பாலான சீனர்கள் இங்கு பிறந்தவர்கள் அல்ல" என்று சர்ச்சைக்குரிய வகையில் இன வேறுபாட்டைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஜாகீர் நாயக்கின் இந்தப் பேச்சுக்கு மலேசியாவில் பலதரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதனால், ஜாகீர் நாயக்கிற்கு பல்வேறு இக்கட்டான தருணங்களில் ஆதரவாக இருந்துவந்த பிரதமர் மாகாதிர் முகமது, தற்போது எந்தவிதமன கருத்தும் கூறாமல் மவுனம் காத்தார்.

மேலும், மலேசியாவில் மதப்பிரசாரங்களைத் தவிர்த்து அரசியல்ரீதியான பேச்சுகளைப் பேசாமல் விலகி இருக்குமாறு ஜாகீர் நாயக்கிற்கு பிரதமர் மகாதிர் முகமது அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜாகீர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சால், மலேசியாவில் உள்ள மேலகா, ஜோஹர், செலங்கார், பெனாங், கேடா, பெர்லிஸ், மற்றும் சராவக் ஆகிய மாநிலங்கள் ஜாகீர் நாயக் பொதுமக்கள் மத்தியில் பேசுவதற்குத் தடை விதித்துள்ளன.

மலேசியாவின் முன்னாள் போலீஸ் தலைவர் ரஹிம் நூர், அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ஜாகீர் நாயக்கை நாடு கடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், " ஜாகீர் நாயக்கிற்கு மலேசிய அரசு வழங்கியுள்ள நிரந்தரக் குடியுரிமையை ரத்து செய்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இன வேறுபாட்டைத் தூண்டும் வகையில் ஜாகீர் நாயக் பேசியது உண்மையாக இருந்தால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT