பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் வலுவான அரசு ஆட்சிக்கு வந்திருப்பதால் இந்திய-இலங்கை உறவுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். உண்மையில் கடந்த இருபதாண்டுகளாக வலிமையற்ற அரசுகளாலும் நன்மைகளைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாத தலைமையாலும் இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கை சரியாகத் தீர்மானிக்கப்படாமலே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்ற நிகழ்ச்சிக்கே இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்த விதம் புதிய இந்திய அரசின் வலிமையையும் நம்பிக்கையையும் பறைசாற்றியது. இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போது ஆளும் அரசுகளுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது. எனவே, அவர்களுடைய முடிவுகளுக்கு வலுவான எதிர்ப்புக்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், வலுவான இரண்டு அரசுகளின் நட்புறவு ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கே வழிவகுக்கும் என்பது நிச்சய மில்லை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி இதேபோல அறுதிப்பெரும் பான்மை பெற்று இந்தியாவில் ஆட் சிக்கு வந்த நேரத்தில் இலங்கையில் அதிபர் ஜெயவர்த்தனா மிகுந்த அரசியல் வலிமையுடன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை-இந்திய உடன் படிக்கையை நிறைவேற்றுவதில் பெருத்த தோல்வியே ஏற்பட்டது.
இலங்கையில் அரசின் நிலைத் தன்மை வலுப்பட்டு வருகிறது, நிலைமையில் முன்னேற்றம் ஏற் பட்டுவருகிறது என்றாலும் கடந்த காலம் உணர்த்தும் உண்மையின் அடிப்படையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது; இலங் கைத் தமிழர்கள், சிறுபான்மைச் சமூகத்தவரான முஸ்லிம்கள் ஆகி யோரின் வாழ்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அடுத்துவரும் மாதங்களில் நாம் எப்படி மதிப்பிடுவது?
பாக் விரிகுடா பகுதியில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான மோதல்கள் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சுமார் 2 லட்சம் தமிழர்கள், முஸ்லிம்களை இந்தப் பிரச்சினை நேரடியாக பாதித்து வருகிறது. எல்லைமீறி வந்து மீன் பிடித்தவர்களை திடீரென ஒட்டுமொத்தமாக விடுதலை செய்வது அரசியல் நோக்கங்களுக்காக என்று அனைவருக்கும் புரிகிறது.
தமிழக அரசு தன்னுடைய அணுகு முறையை மறு பரிசீலனை செய்யாவிடில், எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்களுடனான உறவைக் குலைத்ததாக ஆகிவிடும்; இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழக அரசு பொருத்த மற்றும் போய்விடும். இலங்கை மீனவர்களுக்கான கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிடில், இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை மீனவர்களின் வாழ்வாதரமாக விளங்கும் மீன்பாடுகளுக்கு விளைவிக்கும் கடும் சேதத்தைத் தவிர்க்காவிடில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் வேறு துறைகளுக்கும் பரவும், வேறு சில பிரிவு மக்களையும் பாதிக்கும்.
இலங்கை அரசியல் சட்டத்துக் குக் கொண்டுவரப்பட்ட 13-வது சட்ட திருத்தத்தை மதித்து, தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங் களை வழங்குமாறு ராஜபட்ச அரசை மோடி அரசால் வலியுறுத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி. இலங்கைத் தமிழர்களுக்கு அதி காரம் கிடைக்கும் வகையில் அதைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக வலியுறுத்திவரு கிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்துவிட்டாலும் நாட்டில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு அடிப் படையான இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு ஆதரவாக ஏமாற்றிக் கொண்டே வருகிறது இலங்கை அரசு.
இறுதியாக, மோடி அரசு புதிய தாராளமயக் கொள்கை அடிப்படையிலான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியப் பொருளாதாரத் துக்குப் புத்துயிர் ஊட்ட முயற்சிக்கப்போகிறது. அதன் விளைவுகள் இலங்கையிலும் எதிரொலிக்கும். கல்வி மேலும் தனியார்மயப் படுத்தப்படும், வங்கித்துறையில் சீர்திருத்தங்கள் அமலாகும். இத் தகைய சீர்திருத்தங்களால் ஏற் படும் பொருளாதார வளர்ச்சி பலரை ஒன்றுமில்லாதவர்களாக்கி நெருக்கடியை ஏற்படுத்திவிடும்.
வர்த்தகம், லாபம் ஆகியவற்றின் மீது மட்டும் அக்கறைகொண்டு இலங்கையுடன் இந்தியா வர்த்தக உறவுகளை மேற்கொண்டால், மறு கட்டுமானத்துக்கு உதவும் வகை யில் வளர்ச்சிக்கான உதவிகளைச் செய்யத் தவறினால் இலங்கை யின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள், முஸ்லிம்களின் நிலைமை மேலும் பரிதாபமாகி விடும். சிறுதொழில்களுக்கு உதவுவதன் மூலம் இவ்விருபிரிவு மக்களுக்கும் உதவ முடியும்.
இவ்விரு வலுவான தலைவர் கள் இடையில் ஏற்பட்ட சந்திப்பு எந்த திசைநோக்கிச் செல்லும், இருநாட்டு உறவுகளை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதெல்லாம் மேலே கூறப்பட்ட 3 விவகாரங்களைப் பொருத்தது. இரு நாடுகளின் புதிய அரசியல் தலைமைகளும் இந்து தேசிய வாதம், சிங்கள பௌத்த தேசிய வாதம் ஆகியவற்றை அரசியல் தள மாகக் கொண்டவை; இரண்டுமே புதிய தாராளமயக் கொள்கையை ஆதரிப்பவை. இதனால் இரு நாடுகளின் சமூகங்களிலும் இருப்ப வர், இல்லாதவர் இடையே ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும். எனவே இரு நாடுகளிலும் உள்ள முற் போக்கு சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும், இந்திய-இலங்கை எதிர்கால உறவுகள் மீதும் கண்காணிப்பு தேவை.
தமிழில்: சாரி.
(அகிலன் கதிர்காமர் அரசியல் பொருளியல்வாதி,
யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர்)