உலகம்

‘கிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல’ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரீன்லேண்ட் அரசு

செய்திப்பிரிவு

உலகின் பெரிய தீவு என்று அழைக்கப்படும் கிரீன்லேண்ட் தீவை அமெரிக்கா வாங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் தன் விருப்பத்தை தெரிவிக்க கிரீன்லேண்ட் அரசு தன் இணையதளத்தில் “கிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல” என்று பதில் அளித்துள்ளது..

இது தொடர்பாக ட்ரம்புக்கு நெருக்கமானவர் ஒருவர் ‘ட்ரம்ப் இதில் ஆர்வம் காட்டியது உண்மை ஆனால் அவர் சீரியஸாக அதில் இருக்கிறாரா என்பது ஐயமே இது தொடர்பாக இவர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடம் பலமுறை பேசி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் ட்ரம்ப் இதனை சீரியசாகக் கூறுவதாக அவர்கள் நம்பவில்லை என்பதே உண்மை’ என்றார் பெயர் கூற விரும்பாத இந்த நபர்.

ஆனால் கிரீன்லேண்ட் அரசு, “அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல உறவுமுறையில் இருக்கிறோம். எங்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கான பெரிய ஒரு நலனாக இதை பார்க்கிறோம், ஆனாலும் கிரீன்லேண்ட் தீவு விற்பனைக்கல்ல” என்று திட்டவட்டமாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதி கிரீன்லேண்ட் தீவு. இதை வாங்க முதன் முதலாக ஒரு அமெரிக்க அதிபர் கூறுவதல்ல இது. 1946ம் ஆண்டு 100 மில்லியன் டாலர்கள் தருவதாக டென்மார்க்கிடம் அமெரிக்கா விலை பேசியது. இதற்குப் பதிலாக அலாஸ்காவின் ஒரு நிலப்பகுதியையும் ஆர்ட்டிக் தீவின் சில பகுதிகளையும் வழங்குவதாக பேச்சு. ஆனால் இது கைகூடவில்லை.

ட்ரம்ப் அடுத்த மாதம் டென்மார்க் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

-அசோசியேட் பிரஸ்

SCROLL FOR NEXT