உலகம்

காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தை: ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் சீனா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பிடிஐ

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ. நா. பாதுகாப்பு சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதிய நிலையில், சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கை சமீபத்தில்தான் விடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை குறித்து எந்தத் தேதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது.

காஷ்மீரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த 4-ம் தேதியிலிருந்து இந்தியப் பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.

செல்போன், லேண்ட்லைன், இணைய சேவை, செய்தி சேனல்கள், நாளேடுகள் என அனைத்துவிதமான தகவல் தொடர்புகளை இந்திய அரசு துண்டித்துள்ளது.

SCROLL FOR NEXT