வாஷிங்டன்:
இந்தியாவும் சீனாவும் இனி ‘வளரும் நாடுகள்’ என்று அழைக்கப்படக் கூடாதது, ஆகவே உலக வர்த்தகக் கூட்டமைப்பில் இதன் சாதக அம்சங்களை இந்த நாடுகளுக்கு வழங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகப் போர் ஓயாத நிலையில் இருநாடுகளும் ஓயாமல் கட்டணங்களையும் வரியையும் ஒருவர் மீது ஒருவர் திணித்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவும் இந்தியாவும் வளரும் நாடுகள் என்ற அடையாளத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற கொள்கையின் மூலம் ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா கடும் வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்தியாவை ‘கட்டண ராஜா’ என்று வர்ணித்தார்.
கடந்த ஜூலையில் வளரும் நாடு என்று ஒன்று அடையாளப்படுத்தப்படுவது எதன் அடிப்படையில் என்று ட்ரம்ப் உலக வர்த்தகக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பினார். இதனால் சீனா, துருக்கி, இந்தியா போன்ற நாடுகள் பல சலுகைகளைப் பெறுகின்றன என்று ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அமைப்புக்கு சிறப்பு அதிகாரம் அளித்து எந்தெந்த நாடுகள் வளரும் நாடுகள் என்ற அடையாளத்தின் கீழ் வராமல் ஆனால் உலக வர்த்தக விதிமுறைகளின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பயனை அடைகின்றன என்பதைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு பணித்திருந்தார்.
இந்நிலையில் பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியாவும் சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல, ஆகவே அதற்கான பயன்களை அவர்கள் அடைய முடியாது என்று கூறினார். “இந்தியாவும் சீனாவும் இந்த பயனை ஆண்டுக்கணக்காக அனுபவித்து வருகின்றனர்” என்றார்.
“ஆம் அவர்கள் வளர்ந்து விட்டார்கள், ஆகவே டபிள்யு.டி.ஓவின் விதிமுறைகளை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்க முடியாது. இதை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது நம்மை தவிர அனைவரும் வளர்ச்சியடைகின்றனர்” என்றார் ட்ரம்ப்.
-பிடிஐ