உலகம்

இந்திரா காந்தி படுகொலைக்கு காரணமாக இருந்த காலிஸ்தான் தலைவரை ஒப்படைக்க தாட்சர் மறுத்தார்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆவண காப்பகம் தகவல்

செய்திப்பிரிவு

காலிஸ்தான் தலைவர் ஜெகஜித் சிங் சவுகானை ஒப்படைக்குமாறு 1976-ம் ஆண்டிலேயே பிரிட்டனிடம் இந்தியா வலியுறுத்தியது. ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர், அவரை ஒப்படைக்க மறுத்தது இப்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவல்களை பிரிட்டிஷ் தேசிய ஆவண காப்பகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில் கடந்த 1984 முதல் 1985 வரையிலான காலத்தில் பிரிட்டன், இந்தியாவுக்கு இடையிலான உறவு எவ்வாறு இருந்தது என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

காலிஸ்தான் இயக்கத்தை தோற்றுவித்த ஜெகஜித் சிங் சவுகான் கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பிரிட்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தபடியே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

கடந்த 1976-ம் ஆண்டிலேயே அவரை ஒப்படைக்குமாறு இந்திய தரப்பில் பிரிட்டனிடம் வலியுறுத் தப்பட்டது. இந்த விவகாரத்தில் சவுகான் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தாட்சர் உத்தரவிட்டார். ஆனால் ஆதாரம் இல்லாமல் சவுகான் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.

இதுகுறித்து தாட்சரின் தனிச் செயலாளர் சார்லஸ் பாவல் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தை தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில், இந்திரா காந்தி படுகொலையில் தனக்கு தொடர்பில்லை எனக் கூறி சவுகான் எப்படி தப்பிக்க முடியும் என்று பிரதமர் (தாட்சர்) கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பான சட்டம், ஆவணங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளராக இருந்த சர் ஜெப்ரே ஹாவே பிரதமர் தாட்சருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியா கோருவதுபோல சவுகானை ஒப்படைக்க முடியாது. பிரிட்டிஷ் சட்டப்படி அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, உறுதியான ஆதாரங்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எனினும் பிரிட்டிஷ் அரசு தரப்பில் சவுகானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தேசிய ஆவண காப்பக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி பேட்டி

காலிஸ்தான் தலைவர் ஜெகஜித் சிங் சவுகான் பிபிசி-க்கு அளித்த சிறப்பு பேட்டியில், ‘புளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில் இந்திராவும் அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்படுவது உறுதி என்று சூளுரைத்தார்.

அடுத்த சில மாதங்களில் 1984 அக்டோபர் 31-ம் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நவம்பர் 3-ல் நடந்த இறுதிச் சடங்கில் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியபோது, மறைந்த இந்திராவுக்கும் எனக் கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே பிரதமர்கள். பெண் தலைவர்கள். இருவருக்கும் அன்பான குடும்பம் உள்ளது. இருவரும் ஒரேவிதமான கொள்கை களை கொண்டிருந்தோம். அதாவது ஒருவர் அன்பு, பண்பு, மனிதநேயத்துடன் வாழ முடியும்.

அதேநேரம் அவர் உறுதியாகவும் திடமாகவும் தீர்க்கமான முடிவெடுக்க கூடியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்களின் பாதை, கொள்கை சிலருக்கு முன்னுக்குப் பின்னாக தோன்றலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும்போது அயர்லாந்து பிரிவினைவாதிகளால் தாட்சரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது. எனினும் இந்திராவின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் அச்சுறுத்துலை பொருட்படுத்தாது இறுதிச் சடங்கில் பங்கேற்றார் என்று தேசிய ஆவண காப்பக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ராஜீவ் காந்தி உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அதிகம் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்று பிரிட்டிஷ் உளவுத் துறை தாட்சருக்கு ரகசிய அறிக்கை அளித்தது. அது தொடர்பான ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெகஜித் சிங் சவுகான் விவகாரத்தால் இந்திய, பிரிட்டிஷ் உறவுக்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு உறுதியாக இருந்தது. இந்தப் பிரச்சினையில் பிரிட்டனுடனான வர்த்தக உறவை இந்தியா புறக்கணிக்கக்கூடும், பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கூடும் என்று தாட்சரிடம் அவரது ஆலோசகர்கள் அறிவுறுத்தினர். அதற்கேற்ப தனது சொந்த விருப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் சமயோசிதமாக தாட்சர் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT