ஹாஸ்டன்,
அமெரிக்காவில் ஹாஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ம் தேதி நடக்கும் இந்திய, அமெரிக்கர்கள் மாநாடான 'ஹவுடி, மோடி' கூட்டத்தில் பங்கேற்க 40 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி, அதற்கு முன்னதாக ஹாஸ்டனில் இந்திய வம்சாவளி மக்களின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் முன் பேச உள்ளார். இதற்கு முன் 2014-ம் ஆண்டில் நியூயார்க்கில் மாடிஸன் சதுக்கத்திலும், கடந்த 2016-ம் ஆண்டில் சிலிக்கான் வேலியிலும் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர். ஆனால், இந்த முறை 2-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் பேச இருப்பதால், 40 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஹவுடி (Howdy) என்பது ஆங்கிலத்தில் 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?' (‘How do you do?’) என்பதின் சுருக்கமாகவே 'ஹவுடி' என்று அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் மக்கள் அழைக்கின்றனர். அதன் பெயரிலேயே 'ஹவுடி மோடி' என்று நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை என்ற போதிலும், நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே இந்தியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஹாஸ்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நுழைவுச் சீட்டுகளை வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்தின் கணிப்பின்படி 50 ஆயிரம் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய 4-வது கால்பந்து அரங்கான ஹாஸ்டனில் இருக்கும் என்ஆர்ஜி கால்பந்து அரங்கில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
ஹாஸ்டன் நகர மேயர் செல்வெஸ்டர் டூமர் கூறுகையில், "இந்தியர்கள் அதிகமாக, சக்திமிக்கவர்களாக இருக்கும் இந்த ஹாஸ்டன் நகரத்துக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் மோடியை நான் வரவேற்கத் தயாராக இருக்கிறேன்.
ஹாஸ்டன் நகரமும், இந்தியாவும் வர்த்தகம், கலாச்சாரம், சுற்றுலாவில் சிறப்பான உறவில் இருக்கும்போது, பிரதமர் மோடியின் வருகை இன்னும் உறவைப் பலப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜுகல் மலானி கூறுகையில், " பிரதமர் மோடி உரையாற்றுவதற்குமுன், 'ஷேர் ட்ரீம்ஸ் பிரைட் ப்யூச்சர்ஸ்' என்ற தலைப்பில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இந்தக் கலைநிகழ்ச்சியை நடத்துகின்றனர்.ஒட்டுமொத்த ஹாஸ்டன் நகரில் உள்ள மக்களும் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ