இஸ்லாமாபாத்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது.இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.
இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக, 'டிஎன்ஏ இணையதளம்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.
பிப்ரவரி மாதம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 முதல் 7 தீவிரவாதிகள் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சமீபத்தில் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கமாண்டர் முப்தி அஸ்கர் ராப்புடன் ஆலோசனையும் நடத்தியுள்ளது. ராணுவ உடையில் தீவிரவாதிகள் இருக்க வேண்டும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கவலைப்படாமல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட கடந்த வாரம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதால், காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்து இருந்தார்
. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் மீது அழுத்தம் அதிகரிப்பதால் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால், இந்த தாக்குதல் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு தருகிறது என்று கூறுகிறார்கள் " எனத் தெரிவி்த்திருந்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மிகப் பயங்கரமான ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கியும், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கியும் நகர்கிறார்கள் என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமித் மிர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்விட்டர் செய்தியில் ஹமித் மிர் கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நண்பர்களிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி, பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கர ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் சர்வதேச எல்லைக் கோட்டை நோக்கி செல்கிறார்கள். இதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள். கையில் பாகிஸ்தான் கொடிகள், 'காஷ்மீர் பனே கா பாகிஸ்தான்' என்ற வாசகத்தை உச்சரித்தபடி செல்கிறார்கள் " எனத் தெரிவித்திருந்தார்.