கொழும்பு
இலங்கையில் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளராக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இலங்கையின் அதிபராக பதவி வகித்துவரும் மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதிவாக்கில் முடிவடையும் நிலையில் இருப்பதால் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதில் இலங்கை மும்முரமாக இயங்கி வருகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இலங்கையின் ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்ச (70), வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனை இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கோத்தபய இலங்கையில் வலுவான அதிபர் என்ற பெயரைப் பெற்ற முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முப்பதாண்டுகளாக நீடித்துவந்த விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியுடன் செயல்பட்ட கோத்தபய, சிங்கள பவுத்த பெரும்பான்மையினர் மத்தியில் சூப்பர் ஹீரோ அந்தஸ்தைப் பெற்றார்.
கடந்த பல மாதங்களாகவே இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பல்வறு ஊகங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இன்று ராஜபக்ச அதை உடைத்து தனது தம்பியின் பெயரை முன்மொழிந்தார்.
"என் சகோதரர் இப்போது உங்கள் சகோதரர், நமக்கு ஒழுக்கமும் சட்டமும் தேவை, கோதபயா அதற்கு பொறுத்தமான மனிதர்" என்று இன்று நடைபெற்ற அதிபர் வேட்பாளர் அறிவிப்புக்கான கூட்டத்தில் உரையாற்றிய ராஜபக்சே கூறினார்.
அதிபர் வேட்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கோத்தபய தெரிவித்ததாவது:
"எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் எனது கடமைகளை நான் எப்போதும் செய்திருக்கிறேன். எப்போதும் அது தொடரும். ஒரு நாட்டில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இலங்கையின் இறையாண்மையில் தலையிட நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன். நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டேன் " என்று அவர் கூறினார்.