உலகம்

சிரியாவில் மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்: அச்சத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்கள்: ஐ.நா.

செய்திப்பிரிவு

சில நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் புதிதாக ஆரம்பித்துள்ள சண்டையினால் லட்சக்கணக்கான மக்கள் அச்சத்தில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரமான தாக்குதலை அரசுப் படைகள் நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுடன் போர் நிறுத்தத்திற்கு கடந்த வாரம் அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் போர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதலை அரசு தொடர்ந்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் மீண்டும் புதிதாக வன்முறை ஆரம்பித்துள்ளது. இட்லிப் மாகாணத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலில் வாழ்கின்றனர்.

சண்டை நிறுத்தத்தின்போது ஏராளமான பொதுமக்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதலை அரசு தொடர்வது ஆபத்தானது” என்று எச்சரித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT