நியுஸிலாந்தில் வசிக்கும் ஜஸ்டினும் ஜோலா சிஸெனும் வித்தியாசமான தம்பதியர். இருவரும் கயிற்றின் மேல் சாகசங்கள் நிகழ்த்தும் கழைக்கூத்தாடிகள். அதனால் நிரந்தரமாக ஓர் இடத்தில் வாழ்க்கை நடத்த இயலாது. ஊர் ஊராகச் சென்றுகொண்டிருப்பார்கள். தங்களுக்கு என்று ஒரு வீட்டை உருவாக்கி, தாங்கள் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். ஒரு ட்ரக்கில் வீட்டை உருவாக்கினார்கள். பயணத்தின்போது சாதாரணமாகத் தெரியும் இந்த ட்ரக், ஓரிடத்தில் நிறுத்தி, வீட்டைப் பிரித்தால், பிரம்மாண்டமாக விரிகிறது. சோஃபாக்களுடன் ஹால், படுக்கை அறை, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சமையல் அறை, இயற்கை காற்று உள்ளே வரும் விதத்தில் வீடு முழுவதும் ஜன்னல்கள், கண்ணுக்குத் தெரியாதபடி அலமாரிகள், நீச்சல் தொட்டியுடன் கூடிய குளியலறை என்று பிரமாதமாக இருக்கிறது. வீட்டின் மேல் தளத்தில் உடற்பயிற்சி செய்வதற்கும் விளையாடுவதற்கும் இடம். வீட்டின் வாயிலில் கோட்டையை நினைவூட்டும் இரண்டு கோபுரங்கள் என்று ஒவ்வொன்றையும் ரசனையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம், மழை நீர் சேகரிப்பு என்று திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். ‘‘வேலை இல்லாத நாட்களில் இந்தக் கோட்டையில் எங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம். நிகழ்ச்சி இருந்தால், குடையை மடிப்பது போல, வீட்டை மடித்து, சிறியதாக்கிவிடுவோம். பிறகு ட்ரக்கை ஓட்டிச் சென்று விடுவோம். சின்ன இடத்தில் அனைத்தையும் திட்டமிட்டு உருவாக்க முடியும் என்ற யோசனையை விமானம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது’’ என்கிறார் ஜஸ்டின்.
வீட்டை உருவாக்கியவர்களின் கற்பனைத்திறனும் தொழில்நுட்பமும் பிரமாதம்!
ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஸ்நோரி அஸ்முண்ட்சன். தன்னுடைய ஒரு ப்ராஜக்ட்டுக்காக இறந்துபோன சடலங்களைத் தானமாகத் தருமாறு கேட்கிறார். இறந்தவர்களின் உடல்களை வைத்து நடனமாடி, வீடியோ எடுத்துவிட்டு, மீண்டும் குடும்பத்தினரிடம் அப்படியே சடலத்தை ஒப்படைத்துவிடுகிறார். 2008-ம் ஆண்டு இறந்த சடலங்களைக் கேட்டு விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தைப் பார்த்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் 20 பேர் சடலங்களை ஒப்படைக்கத் தயாராகினர். அந்த நேரம் வீடியோ எடுப்பதற்குத் தேவையான பணம் ஸ்நோரியிடம் இல்லை. சில ஆண்டுகள் தன் ப்ராஜக்ட்டை மறந்து இருந்தவர், தற்போது மீண்டும் வேலையில் இறங்கிவிட்டார். இந்த முறை அவருடைய நண்பர்கள் மெக்ஸிகோ, சீனாவில் இருந்து இறந்த சடலங்களை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் ஸ்நோரி. ’’என்னுடைய ப்ராஜக்ட் என் நாட்டு மக்களுக்குத்தான் பயன்படப் போகிறது. அதில் என் நாட்டு மக்களைப் பயன்படுத்துவதுதான் நியாயம். ப்ராஜக்ட் வெளிவந்த பிறகு, சடலங்களைக் கொடுத்த குடும்பங்கள் பெருமிதம்கொள்வார்கள். இறந்தவர்களை மதிப்பார்கள். நான் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை. இந்த ப்ராஜக்ட்டை இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை’’ என்கிறார் ஸ்நோரி. ஆனால் இதுவரை அந்த ப்ராஜக்ட் என்ன என்பதை ஒருவருக்கும் சொல்லவில்லை.
அப்படி என்ன ரகசிய ப்ராஜக்ட் ஸ்நோரி?