இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசின் முடிவை ஆதரித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் சில பகுதிகளில் இந்தியாவுக்கு ஆதரவாக சில பேனர்கள் எழுந்தன. ஆனால் இது பேனர் வடிவமைப்பாளர்களின் பிழை மற்றும் செயல்பாட்டாளர்களின் மோசமான ‘மொழி’ ஆகியவற்றால் நிகழ்ந்த தவறு என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்று பாகிஸ்தான் தலைநகரின் சில பகுதிகளில் சிலர் பேனர்களை வைத்தனர். இதில் உயர் பாதுகாப்பு பகுதியும் அடங்கும்.
இந்த பேனர்கள் நீண்ட நேரம் கவனிக்கப்படாமலே இருந்தது, ஆனால் அதன் பிறகு சிலர் இதைப் பார்த்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேனரை அகற்றி இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
பேனர்களில் ‘அகண்ட பாரதம்’ என்ற கருத்து அடங்கிய வரைபடம் இருந்தது. இந்த மேப்பில் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சிலபகுதிகளும் காணப்பட்டன.
இதில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் கூறிய வார்த்தையான ‘மகாபாரதம் ஒரு அடி முன்னே’ என்ற வாசகமும் பேனர்களில் காணப்பட்டது.
பேனர்களில் காணப்பட்ட வாசகம் இதோ: இன்று நாங்கள் ஜம்மு காஷ்மீரை எடுத்துக் கொண்டோம், நாளை பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர். அகண்ட பாரதம் என்ற கனவை பிரதமர் மோடி உண்மையாக்குவார் என்று உறுதியாகக் கூறுகிறேன்.. என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து இஸ்லாமாபாத் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
வியாழனன்று இஸ்லாமாபாத் மாவட்ட ஆணையர் ஹம்சா ஷஃபாகத் ட்விட்டரில், “பேனர்கள் தொடர்பான விசாரணை முடிந்தது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பேனர் டிசைன் செய்தவரின் பிழைதான். உண்மையான நோக்கம் என்னவெனில் இந்தியாவின் எல்லை விரிவாக்க, ஆதிக்க நோக்கங்களை வெளிப்படுத்துவதுதான், இதில் ஈடுபட்ட இளம் செயல்பாட்டாளர்கள் தங்கள் மொழித்திறன், இலக்கணம் மற்றும் நிறுத்தற்குறியிடுதல்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும்.
இவர்கள் அனுமதி பெற்று இந்த பேனரை வைக்க வேண்டும், ஆனால் அனுமதி பெறாமல் வைத்ததால் கைது செய்துள்ளோம்” என்று நீண்ட விளக்கம் அளித்தார்.
-பிடிஐ