இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச்சட்டம் 370 பிரிவு நேற்று நீக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் மக்களுக்கு எந்த அளவுக்கும் உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின்படி கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு சிறப்பு உரிமைகள், வழங்கப்பட்டு வந்தன. மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் திருத்த மசோதா கொண்டு வந்து அவற்றை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தது.
அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், மற்றொரு பகுதியான லடாக் பகுதியை துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசமைப்புச்சட்டம் 370 பிரிவை நீக்கியது சட்டவிரோதம், ஒரு தலைப்பட்சமான முடிவு என்று கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் செயல்பாட்டை சட்டவிரோதம் என்றும், அணுஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை இது மேலும் மோசமாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவத் தலைமை அலுவலகத்தில் கார்ப்ஸ் கமாண்டர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வா பங்கேற்றார். அப்போது அவர் கமாண்டர்கள் மத்தியில் பேசுகையில், " காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய அரசமைப்புச்சட்ட சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நேரத்தில் காஷ்மீர் மக்களுக்கு நாம் கடைசிவரை துணை நிற்கவேண்டும். அவர்களுக்கு எந்த அளவுக்கும் உதவ ராணுவம் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் முடிவுகளையும், செயல்பாட்டையும் பாகிஸ்தான் அரசு கண்டித்துள்ளதை வரவேற்கிறோம் " எனத் தெரிவித்தார்
பிடிஐ