பிரேசிலை சேர்ந்த கொள்ளையர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிக்க தனது மகள் போல் வேடமிட்டு பின்னர் மாட்டிக் கொண்ட சுவாரசிய சம்பவமும் அவரது வேஷத்தை போலீஸார் கலைக்கும் காட்சியும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
பிரேசிலின் பிரபல கொள்ளை கும்பல் ஒன்றின் தலைவன் க்ளாவினோ டா சில்வா. இவர் போலீஸாரிடம் சிக்கி சிறையில் இருக்கிறார். பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு நரகமாக இருந்தது. இவர் தன்னை சிறையில் பார்க்க வந்த தனது 19 மகளை வைத்து சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டார். இதற்கு இவர் எடுத்த முயற்சிதான் தற்போது பிரபலமாகியுள்ளது.
‘மிஷன் இம்பாஸிபிள்’ என்ற படத்தில் ஹோரோ டாம் குரூஸ் வில்லன்போல் அவரது முகமுடியை பயன்படுத்திச் சென்று கொள்ளையடிப்பார். வில்லன் முகத்தை செலுலாய்டு மூலம் பிரதி எடுத்து தன் முகத்தில் முகமுடிபோல் அணிந்து அவரது கோட்டைக்குள்ளேயே நுழைவார்.
அதேபோன்ற வேலையைத்தான் கைதி க்ளாவினோ டா சில்வாவும் செய்துள்ளார். தனது மகளின் முகத்தை பிரதி எடுத்து செலுலாய்டு மூலம் (அப்படியே மனித தோல் மாதிரியே இருக்கும்) முகமுடி தயாரித்து அதற்குரிய விக் அனைத்தும் தயார் செய்து தனது மகள்மூலம் சிறைக்குள் கொண்டுவர வைத்துள்ளார்.
பின்னர் அவரது உடைகளை அணிந்து மகளின் முகத்தோற்றம் அச்சு அசலாக இருக்கும் முகமுடியை அணிந்து, கண்களை மறைக்க கண்ணாடி அணிந்து விக் வைத்து கிட்டத்தட்ட மகளாகவே மாறிப்போனார். அதே தோற்றத்துடன் முதலில் அவர் வெளியேறிவிடுவது, பின் அவருடைய மகள் (அவர் கைதி அல்லவே) சாதாரணமாக விசிட்டர்போல் அவரும் சில மணி நேரம் கழித்து வெளியேறுவது எனத் திட்டம்.
அனைத்தும் கச்சிதமாக நடந்தது. மகள் வேஷத்துடன் இளம்பெண் போல் நளினமாக நடந்து வெளியேறினார். முதலில் இளம்பெண் என நம்பி அவரை அனுப்பிய போலீஸார், ஏதோ சிறிய விஷயம் உறுத்த போலீஸார் பிடித்து நிறுத்தி விசாரிக்க க்ளாவினோ டா சில்வா சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த போலீஸார், அவரது மேக்கப்பை கலைக்கச் செய்தனர்.
தனது மகளை போல வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற அவரது வேஷத்தை கலைக்கும்போது அதை வீடியோவாக எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட அது தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த திட்டத்தில் அவரது மகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.