பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் | படம்:ஏஎப்பி 
உலகம்

அமெரிக்காவில் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்ட இளைஞர்: 20 பேர் பலி; 24 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் கடையில் இளைஞர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். 

டெக்ஸாஸின் எல் பாசோ பகுதியில் உள்ள கடையில், நேற்று (ஆகஸ்ட் 3) மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடும்பத் தேவைகளுக்காகவும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள், வால் மார்ட் கடையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது துப்பாக்கியை ஏந்தியவாறு வந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த மக்களை நோக்கிச் சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில்,  20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர், எல் பாஸோ பகுதியில் இருந்து 650 மைல் தொலைவில் உள்ள ஏலன் பகுதியைச் சேர்ந்த 21 வயது அமெரிக்கர் என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

6 நாட்களுக்கு முன்னதாக, வடக்கு கலிஃபோர்னியாவில், டீனேஜ் இளைஞர் ஒருவர், உணவுத் திருவிழாவில் 3 பேரை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளர். இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''இது துயரம் நிறைந்த சம்பவம் மட்டுமல்ல; கோழைத்தனமான செயல். இந்த வெறுப்பு நிறைந்த நிகழ்வைக் கண்டிப்பதில் நான் ஒட்டுமொத்த நாட்டுக்கு ஆதரவாக இருப்பேன். அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை நியாயப்படுத்தக் கூறப்படும் எந்தக் காரணங்களும் சரியல்ல'' என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ்

SCROLL FOR NEXT