உலகம்

இலங்கையிலுள்ள இந்து கோயில்களை பிரதமர் நரேந்திர மோடி காக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்,

இலங்கையின் உள்ள இந்து கோயில்களை பவுத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் இந்து சமயம்  ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. இலங்கையை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து கோயில்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தி உள்ளதும், குறிப்பாக மன்னர்கள் சைவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததை வரலாற்றுச் சான்றுகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கை தமிழர்கள் பெருன்பான்மையினர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து கோயில்களை பவுத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீன முன்றலில் இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களை பிரதமர் நரேந்திர மோடி காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்து அமைப்புகளின் ஒன்றியம்  ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவை சேனாதிராசா கூறுகையில், ''தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக் காலம் முதல் அமைக்கப்பட்டிருந்த இந்து கோயில்கள் சமீபகாலமாக அழிக்கப்படுவதும் ஆலய வளைவுகள் உடைக்கப்படுவதும், பவுத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதும் இலங்கை வாழ் இந்துக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில், கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோயில், நீராவிப் பிள்ளவயார் கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் இந்து கோயில்களை காக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்து அமைப்புகளின் ஒன்றியம் சார்பாக மனுவும் அளிக்கப்பட்டது.

- எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT