நியூயார்க்,
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 28-ம் தேதி உரையாற்றுகிறார்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி பேச உள்ளார். இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பேசி இருந்தார். இப்போது, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றபின், மீண்டும் ஐ.நா.வில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
ஐ.நா.சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தரும்போது, அமெரிக்கா, இந்தியா அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடக்கும், பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.சபையின் ஆண்டு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேச்சுக்கு அடுத்தார்போல் முதலாவது தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 24-ம் தேதி பேசுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். செப்டம்பர் 27-ம் தேதி பாகிஸ்தான் சார்பில் அதன் பிரதிநிதி உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அந்நாட்டின் சார்பில் யார் பங்கேற்பார் என உறுதியாகவில்லை.
பிரதமர் மோடி செப்டம்பர் 28-ம் தேதி காலையில் ஐ.நா சபையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபையில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கும் விவாதம் 30-ம் தேதிவரை நடக்கும்.
48 நாடுகளின் தலைவர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், 112 நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி செப்டம்பர் 22-ம் தேதி ஹாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ