லைல்ட் லைப் புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர் எடுத்த புகைப்படம் : படம் உதவி ஃபேஸ்புக் 
உலகம்

அரிதான 'வைல்ட் லைஃப்' புகைப்படம்:  கடல் சிங்கத்தை உயிருடன் விழுங்கும் 'கூனல் திமிங்கலம்' 

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்செல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் வாழும் கூனல் திமிங்கல மீன்களில் ஒன்று, கடல் சிங்கத்தை உயிருடன் விழுங்கும் அரிதான காட்சியை வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். 

இந்தப் புகைப்படம் வைல்ட் லைஃப் உலகில் மிகவும் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர். இவர் கடந்த 22-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள மான்ட்டெரே விரிகுடா கடலில் கடல் திமிங்கலங்கள் குறித்த புகைப்படத்துக்காகச் சென்றிருந்தார். 

இந்தக் கடலில் ஆங்கிலத்தில் ஹம்ப்பேக் வேல் என்றும், தமிழில் கூனல் திமிங்கலம் என்று அழைக்கப்படும் திமிங்கல மீன்கள் அதிக அளவில் வாழ்கின்றன. இதன் முதுகுப் பகுதியில் மிகப்பெரிய துடுப்பும் உடலில் வரிக் கோடுகளும் இருப்பதால் இதை கூனல் திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

பாலூட்டி வகை இனமான கூனல் திமிங்கலம், குட்டியிடும் வகையைச் சேர்ந்தது. உலகின் மிகப்பெரிய திமிங்கலங்களில் இதுவும் ஒன்று. இதன் வாய்க்குள் மட்டும் ஏறக்குறைய 19 ஆயிரம் லிட்டர் தண்ணீர் (5 ஆயிரம் கேலன்) நிரப்பிக்கொள்ளும் அளவுக்குப் பெரியதாகும். 

இந்த மீன்கள் கூட்டமாக வாழக்கூடிய தன்மை என்பதால், இதைப் புகைப்படம் எடுக்க சேஸ் டெக்கர் சென்றிருந்தார். இந்த கடல் பகுதியில் கடல் சிங்கங்கள்( sealion) அதிகமாக இருக்கின்றன. கூனல் திமிங்கலத்தைப் பார்த்தவுடன் அதைப் புகைப்படமாக எடுத்த சேஸ் முற்பட்டபோது மிகவும் அரிதான காட்சியைக் கண்டு அதை சேஸ் புகைப்படமாக எடுத்தார்.

கூனல் திமிங்கலம், தண்ணீரில் இருந்த கடல் சிங்கத்தை தனது தாடையால் தூக்கிப்போட்டு, வாய்க்குள் விழுங்கும் காட்சியை தனது கேமரா கண்களால் புகைப்படம் எடுத்தார். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இதுபோன்ற காட்சியை அரிதாகப் புகைப்படம் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர் கூறுகையில், " கலிபோர்னியா கடற்கரையில் கடந்த 22-ம் தேதி பயணித்திருந்தேன். அப்போது, ஏராளமான காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கூட்டமாக கூனல் திமிங்கலங்கள் செல்வதையும் பார்க்க முடிந்தது. 

திடீரென அரிதான அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுக்க நேர்ந்தது. கூனல் திமிங்கலத்தின் வாய்க்குள், கடல் சிங்கம் செல்லும் காட்சியை கண்ணிமைக்காமல் எனது கேமராவில் பார்த்து புகைப்படம் எடுத்தேன். 

ஆனால், கடல் சிங்கம் திமிங்கலத்தின் வாய்க்குள் இருந்து வெளியே வரப் போராடி வெளியேறி உயிர் பிழைத்தது.இதுபோன்ற தருணம் என் வாழ்க்கையில் இனிமேல் அமையாது என்றே நினைக்கிறேன். உலகின் மிகவும் அரிதான புகைப்படமாகவும் இது இருக்கும் என நம்புகிறேன்" என தனது இன்ஸ்டாகிராமில் சேஸ் டெக்கர் தெரிவித்துள்ளார்.


பிடிஐ

SCROLL FOR NEXT