சிங்கப்பூரில் சோஃபி என்ற ரோபோ, அந்நாட்டின் பிரபல உணவு வகையை சமைத்து கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது.
சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் ஒன்றால் சோஃபி என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ அந்நாட்டில் பிரபல உணவு வகையான லக்சா ( நூடுல்ஸ் சூப் வகையான உணவு) - வை 45 நொடிகளில் சமைத்து வாடிக்கையாளர்களிடம் பரிமாறுகிறது. மணிக்கு சுமார் 80 சூப் பவுல்களை சோபி வாடிக்கையாளார்களுக்கு தயார் செய்து தருகிறது.
ஆரன்ஞ் க்லோவ் ஓட்டலில் பணி செய்யும் சோஃபி ரோபோ சூப் தயாரிப்பு காரணமாக பிரபலமாகி உள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் சோஃபி ரோபோ சமைத்த உணவு குறித்து கூறும்போது, ”மிகவும் அற்புதமாக இருந்தது. மனிதர்கள் சமைப்பதற்கும் ரோபோ சமைப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்றார்.
சோஃபி ரோபோ சமையல் காரணமாக ஆரன்ஞ் க்லோவ் ஓட்டல் தற்போது கூடுதலாக அந்தப் பகுதியில் பிரபலம் அடைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்வமாக அதிக அளவில் குவிகின்றனர். சிங்கப்பூரில் ஓட்டல்களில் ரோபோகளை பணியமர்த்துவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.