உலகம்

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நில நடுக்கம்; வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி

செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த விபரம்: 

''வடக்கு பிலிப்பைன்ஸ் தீவுகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரும்  உறங்கிக்கொண்டிருந்தனர்.  நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் இடிந்துவிழுந்தன. பல இடங்களில் வீடுகள் குலுங்கின.

நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்த இடிபாடுகளில் சிக்கி  8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது வீடுகள் இடிந்து விழுந்ததால் பலர் தப்பிக்க முடியாமல் உயிரிழந்துள்ளனர். வீடுகள் குலுங்குவதை பார்த்த குடியிருப்பாளர்கள் பலரும் தங்கள் வீட்டை விட்டு பயந்து வெளியேறினர்''

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பெரிய லூசன் தீவின் வடக்கே படேன்ஸ் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் 5.4 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த வீடுகளையும், பல இடங்களில் நடைபாதை சாலைகளில் ஏற்பட்ட ஆழமான விரிசல்களும் ஒளிபரப்பின.

தீவிர நில அதிர்வு தென்கிழக்கு ஆசிய வளையம்

நிறைய தீவுகள் அடங்கிய படேன்ஸ் மாகாணத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின்  வளைவு’ என அழைக்கப்படும்  பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" இன் ஒரு பகுதியாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் படேன்ஸ் மாகாண பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

SCROLL FOR NEXT