உலகம்

கடும் சண்டை எதிரொலி: சிரியாவிலிருந்து 3 மாதங்களில் 4 லட்சம் பேர் இடம்பெயர்வு

செய்திப்பிரிவு

சிரியாவில் கடந்த மூன்று மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மூத்த தலைவர் மிச்செல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் தொடர்ந்து நடத்தப்படும் வான்வழித் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சர்வதேச அலட்சியம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் வசம் உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் மீது சிரிய ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன என்று சிரிய கண்காணிப்புக் குழு புகார் தெரிவித்துள்ளது. 

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக  உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அமைப்புக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இதில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மாகாணம்  மட்டும் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இதனை மீட்க அரசுப் படைகள் ரஷ்யாவுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT