பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை அந்த நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
அது இந்திய உளவு விமானம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியத் தூதரை வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸும் அளித்தது.
அடுத்தடுத்து அத்துமீறல்
ரஷ்யாவின் உஃபா நகரில் அண் மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினர். அப்போது மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பிய பிறகு அந்த நாட்டின் நடவடிக்கைகள் எதிர்மறை யாக உள்ளன. அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ், காஷ்மீர் விவகாரம் இடம்பெறவில்லையெனில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.
மேலும் மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஜகியூர் ரஹ்மான் லக்வியின் குரல் பதிவை அளிப்பதாக வாக்குறுதி அளித்த பாகிஸ்தான் அரசு, தற்போது குரல் பதிவைப் பெற சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரின் புக்லியன்-ஆக்னார் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை விசி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பறந்த ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அது இந்திய ராணுவத்தின் உளவு விமானம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனை இந்திய விமானப் படை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய ராணுவத்தின் எந்த உளவு விமானமும் சுடப்படவும் இல்லை, தரையில் விழவும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் டி.சி.ஏ. ராகவனை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தது. அப்போது இந்திய உளவு விமானம் பாகிஸ்தான் எல்லையில் பறந்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அது இந்திய விமானம் அல்ல என்று டி.சி.ஏ. ராகவன் விளக்கிய போதும் அதை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. உளவு விமானம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ராகவனிடம் அந்த நாட்டு அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
சொந்த விமானத்தை சுட்டதா?
இந்திய ராணுவத்தில் உள்நாட்டு தயாரிப்பான ‘நேத்ரா’ உளவு விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவை அளவில் பெரியவை. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் மிகச் சிறியது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அந்த விமானம் சீன தயாரிப்பு என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற உளவு விமானங்களை இணையதளங்களில் ரூ.1.5 லட்சத்துக்கு யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.
பாகிஸ்தான் போலீஸார் இந்த வகை உளவு விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சொந்த உளவு விமானத்தையே பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.