லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அமைப்பு கூறும்போது, “ லிபியாவின் தலைநகரம் திரிபோலியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் அப்பால் உள்ள கடற்கரை நகரமான அல் குல்ஸில் சுமார் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
மிதமுள்ளவர்கள் அங்குள்ள உள்ளூர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர். இந்த ஆண்டில் மட்டும் லிபியாவிலிருந்து வேறு நாட்டுக்கு கடல் வழியாக செல்லும் முயற்சியில் சுமார் 600 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.
அங்கு நிலவும் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக வாழ்வாதாரத்துக்காக மக்கள் வேறு நாட்டுக்கு உயிரை பணயம் வைத்து கடலில் பயணிக்கின்றனர்.