பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் பேரணியாகச் சென்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்திருக்கும் நிலையில், பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான் சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் இன்று (வியாழக்கிழமை) பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், இதனை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.