பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர். ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.
ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்தார் தெரசா மே.
இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 1,59,320 உறுப்பினர்களில் 92,143 பேர், போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் எதிர்த்துப் போட்டியிட்ட ஜெர்மி ஹண்ட்டுக்கு 46,656 வாக்குகள் கிடைத்தன. இதில் போரிஸ் ஜான்சன் பெற்ற வாக்கு சதவீதம் 66.4% . ஜெர்மி ஹண்ட் பெற்ற வாக்கு சதவீதம் 33.6% .
இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமராக இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பேசும்போது, “இன்னும் 3 மாதங்களுக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார். இதுகுறித்து எதிர்மறைக் கருத்தைத் தெரிவிப்பவர்கள், சந்தேகிப்பவர்களின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்று தெரிவித்தார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து போரிஸ் ஜான்சனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் அவரது காரை வழி மறித்தனர்.
யார் இந்த போரிஸ் ஜான்சன்
தற்போது பிரிட்டனின் பிரதமராகி இருக்கும் போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுச் செயலாளர், மேயர் என பல பதவிகளை வகித்துள்ளவர் போரிஸ் ஜான்சன். 55 வயதாகும் போரிஸ் ஜான்சன் பத்திரிகைத் துறையில் பணியாற்றும்போது பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவராகவும் இருந்தார்.