ரிஹானாவுடன் 5-ம் சுல்தான் முகமது. 
உலகம்

ரஷ்ய மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த மலேசிய முன்னாள் மன்னர்

செய்திப்பிரிவு

கோலாலம்பூர்

மலேசியாவின் முன்னாள் மன்னர் 5-ம் சுல்தான் முகமது தனது ரஷ்ய மனைவி ரிஹானாவை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதை ரிஹானா மறுத்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய மன்னராக 5-ம் சுல்தான் முகமது பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ முன்னாள் அழகியான ரிஹானா ஒக்சனா கோர்படென்கோவை சுல்தான் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி சுல்தான் முகமது பதவி விலகினார். மலேசிய வரலாற்றில், பதவிக்காலம் (5 ஆண்டு) முடிவதற்கு முன்பே பதவி விலகிய முதல் மன்னர் இவர்தான். எனினும், மலேசியாவின் கெலந்தன் மாகாணத்தின் மன்னராக சுல்தான் நீடிக்கிறார். கடந்த மே மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஷரியா சட்டப்படி கடந்த ஜூன் 22-ம் தேதி ரிஹானாவை சுல்தான் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக சிங்கப்பூரைச் சேர்ந்த அவரது வழக்கறிஞர் கோ டீன் ஹுவா கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கெலந்தன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய நீதிமன்றம் விவாகரத்து சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும் ஹுவா தெரிவித்துள்ளார்.

ஆனால், விவாகரத்து செய்தது தனக்கு தெரியாது என ரிஹானா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி இணையதளமான மலேசியாகினிக்கு ரிஹானா அளித்த பேட்டியில், “சுல்தான் விவாகரத்து செய்தது தொடர்பான எந்த தகவலும் எனக்கு நேரடியாக கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரிஹானா தனது கணவர் சுல்தான், குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT