நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதை யடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் வீடுகளை விட்டு வெளியே றினர்.
இதுகுறித்து சம்பவம் நடந்த மைகதிரி கிராமத்தைச் சேரந்த சைமன் டெம்ப்ளர் கூறும்போது, “காலை 9 மணிக்கு எங்கள் கிராமத் துக்குள் நுழைந்த சிலர் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் என்னுடைய வயதான அம்மாவும் படுகாயமடைந்தார். இதையடுத்து பலர் வீடுகளைவிட்டு வெளியேறி விட்டனர். பல வீடுகள் மற்றும் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன” என்றார்.
மற்றொரு கிராமவாசி மர்குஸ் அலி கூறும்போது, “எங்கள் ஊரில் போலீஸாரோ, ராணுவ வீரர்களோ இல்லாததால் பகல் நேரத்திலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் 21 பேர் பலியாயினர்” என்றார்.
இந்த சம்பவத்தை போர்ணோ மாகாண தலைநகர் மைடுகுரியில் உள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.