உலகம்

அமெரிக்காவில் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு: பலுச்சிஸ்தான் ஆதரவாளர்கள் ஆவேசம்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்

அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற நிகழ்ச்சியில் பலுச்சிஸ்தான் மக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல்முறையாக அவர் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார்.

சிக்கன நடவடிக்கையாக தனி விமானத்தை தவிர்த்து பயணிகள் விமானத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார். அங்கு அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.

அரிக்காவில் நட்சத்திர ஓட்டலில் தங்காமல் பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் இம்ரான் கான் தங்கியுள்ளார்.காரை தவிர்த்து விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் தூதரின் வீட்டுக்கு சென்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் இன்று சந்தித்துப் பேச உள்ளார்.

பலுச்சிஸ்தான் ஆதரவு அமைப்புகளும், மக்களும் வாஷிங்டனில் இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலமான பலுச்சிஸ்தான் மக்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் வாஷிங்டனில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.

அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், அமெரிக்க பாதுகாப்பு படையினர் அவர்களை அரங்கத்தை விட்டு வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் விடாமல் கோஷம் எழுப்பினர். சற்று நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

SCROLL FOR NEXT