துபாய்
துபாயில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு, மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு (36). அபுதாபியில் பிறந்த இவர் துபாயில் வசித்து வந்தார். பெற்றோரை இழந்த இவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து வந்தார்.
கடந்த 19-ம் தேதி துபாயில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில், மஞ்சுநாத் உள்ளிட்ட பல நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்றனர். அப்போது, கடைசியாக மேடையேறிய மஞ்சுநாத், அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். திடீரென பதற்றமாக இருப்பதாகக் கூறிய அவர், அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். பின்னர் நிலைகுலைந்து தரையில் விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது நண்பரும் சக காமெடியனுமான மிக்தாத் தோஹத்வாலா கூறும்போது, “மஞ்சுநாத் மேடையில் தன்னுடைய கதைகளைக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, மறைந்த தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கதைகளைக் கூறினார்.
பின்னர் பதற்றம் காரணமாக தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் தனது நடிப்பின் ஓர் அங்கமாகவே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார் என அங்கிருந்த அனைவரும் கருதினர். ஆனால் அவர் உண்மையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார். வேறு உறவினர்கள் யாரும் இல்லை. நாங்கள்தான் அவருக்கு குடும்ப உறுப்பினர்களாக இருந்தோம்” என்றார்.