அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுக் கட்சி ஒற்றுமையாக இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய குடியுரிமைக் கொள்கைகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அலெக்ஸ் சாண்டிரியா ஒகேசியோ, இல்ஹான் உமர், அயன்னா பிரஸ்லி, ரஷிதா த்லைப் ஆகிய நான்கு பேருக்கு எதிராக தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துகளைப் பதிவிட்டார்.
அதில், ''எங்களுடைய நாடு சுதந்திரமாகவும், அழகாகவும் வெற்றி பெற்ற நாடாகவும் இருக்கிறது. நீங்கள் நாட்டை வெறுக்கிறீர்கள் அல்லது இங்கு நீங்கள் சந்தோஷமாக இல்லை என்றால்... நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கு நீங்கள் தாராளமாகச் செல்லலாம்'' என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த இனவெறிக் கருத்துக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. இதில் ட்ரம்ப்புக்கு எதிராக 240 ஓட்டுகளும், ஆதரவாக 184 ஓட்டுகளும் பதிவாகின. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரும் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ''ட்ரம்ப்பின் இந்தக் கருத்து பயங்கரமானது. நிச்சயம் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே இது சுட்டிக்காட்டப்பட வேண்டும்'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் டாம் மலின்னவ்கி தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய ட்வீட்கள் இனவெறியைத் தூண்டவில்லை. என்னுடைய உடலில் இனவெறியும் இல்லை. இது ஜனநாயகக் கட்சியின் விளையாட்டு. இதில் குடியரசுக் கட்சி தனது பலவீனத்தைக் காட்டக்கூடாது. அவர்களது சதியில் விழக்கூடாது'' என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், ''நான்கு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி நான் கூறிய கருத்துகள் தொடர்பாக இன்றைய வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சி எவ்வளவு ஒற்றுமையாக இருந்தது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறி ஜனநாயகக் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.