மாணவர்களில் தொடங்கி பொது மக்கள் வரை அரசுக்கெதிராகத் தங்கள் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்த, அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரவு எட்டு மணியிலிருந்து காலைவரை ஊரடங்குச் சட்டம். எங்குமே எப்போதுமே ஐந்து பேருக்குமேல் சேர்ந்து இருக்கக் கூடாது.
1988 ஆகஸ்ட் 8 அன்று ஒரு பொது வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டது. சிறுபான்மையினர், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர், மாணவர்கள், உழைப்பாளிகள் போன்றவர்கள் இதில் அதிக அளவில் பங்கேற்றனர்.
செப்டம்பர் 19 வரை தினமுமே எதிர்ப்பு ஊர்வலங்கள் இருக்குமென்று அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பின் அளவு கண்டு அரசு அதிர்ச்சியடைந்தது.
“துப்பாக்கிகள் மேலே சுடுவதற்காக அல்ல’’ என்று முழக்கமிட்டார் நெ வின்.
எதிர்ப்பு பலமானதாகவே இருந்தது. காவல் நிலையம் ஒன்று தீக்கிரையானது. பதிலுக்கு ராணுவ வீரர்கள் ரங்கூன் பொது மருத்துவமனைக்கு நெருப்பு வைத்தனர். அங்கிருந்த நோயாளிகளுடன், டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரும் அதில் இறந்தனர்.
8-8-88 அன்று சுமார் 10,000 பேர் இறந்ததாக எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட, 95 பேர் மட்டுமே இறந்ததாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். (சீனாவில் நடைபெற்ற தியானன்மென் சதுக்கப் படுகொலைகளை பலவிதங்களில் நினைவுபடுத்துகிறது மியான்மரின் 8.8.88 படுகொலைகள் - மாணவர்களுக்கெதிரான அடக்குமுறையிலிருந்து இறந்தவர்கள் எவ்வளவு பேர் என்பதில் வெளியான மலையளவு வேறுபாடு உட்பட).
திடீரென எதிர்பாராத வகையில் லூவின் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து டாக்டர் மாங் மாங் என்பவர் நாட்டின் தலைவரானார்.
இவர் முன்னாள் அதிபர் நெ வின்னின் வாழ்க்கை வரலாறை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் இருந்திராத ஒரே தலைவர்.
8-8-88 படுகொலைகளைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்றும் நாடு தழுவிய பெறும் எதிர்ப்புகள் நடைபெற்றன.
ஆகஸ்ட் 26 அன்று ஆங் சான் சூச்சி அரசுக்கு எதிரான முதல் பொது உரையை நிகழ்த்தினார். 5,000க்கும் அதிகமானவர்கள் அதைக் கேட்டனர். ஆங் சான் சூச்சி அரசியலில் நுழைந்தார்.
1988 செப்டம்பர் 18 அன்று மீண்டும் ராணுவம் ஆட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டது. சட்டங்களை மேலும் கடுமையாக்கியது. இனி ராணுவ ஆட்சிதான் என்று அறிவித்தது. ராணுவ ஆட்சி அரியணை ஏறிய ஒரே வாரத்தில் 1,000 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. ஏனோ ராணுவ ஆட்சிக்கான அங்கீகாரத்தை மறுக்கத் தயங்கியது. மியான்மரின் அண்டை நாடுகளிலேயே அதன் ராணுவ ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்தது இந்தியாதான். மியான்மருடனான தனது எல்லைகளை மூடியது. அந்த எல்லைப் பகுதியில் அகதிகள் முகாம்களைத் திறந்தது. சுமார் 10,000 பேர் இங்கு அகதிகள் ஆயினர். அவர்களில் உடல் தகுதி கொண்ட ஆண்கள் பின்பு ராணுவ வீரர்களாக மாறினர்.
1988லிருந்து 2000க்குள் மியான்மர் அரசு அந்த நாட்டில் சுமார் 20 அருங்காட்சியகங்களைத் தொடங்கியது. இவை அனைத்துமே மியான்மர் சரித்திரத்தில் ராணுவத்தின் (கொடூரமான) பங்களிப்பை விவரிக்கின்றன.
1988 புரட்சி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் நியூஸ்வீக் இதழ் தனது அட்டைப் படத்தில் பிரசுரித்த ஒரு புகைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு டாக்டர் ஒரு சிறுமியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். ரத்த வெள்ளத்தில் அந்தச் சிறுமி காணப்பட, டாக்டரின் உடலெங்கும் பரபரப்பு, பயம். அவரது மூக்குக் கண்ணாடி மூக்கில் இருந்து நழுவிய நிலையில்.
அந்த டாக்டர் (அவர் பெயர் வின் ஜா) சமீபத்தில் அந்தக் கறுப்பு தினத்தைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். (இதுவே பெரிய விஷயம்தான். இன்று கூட தங்கள் வலி மிகுந்த கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ள பல பர்மியர்களுக்கும் அச்சம்.)
“இப்போதும் கூட மியான்மரின் கதவுகள் மிக மிகக் கொஞ்சம்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. சரித்திரத்தில் பதியவேண்டும் என்பதற்காகவும், இறந்த பல ஆத்மாக்களின் அமைதிக்காகவும் நான் பேசுகிறேன். மற்றபடி இப்போதும் கூட எனக்கு பாதுகாப்பில்லாத உணர்வுதான்” என்கிறார் அவர்.
(உலகம் உருளும்)