வாகனங்கள் 8-12 ஆண்டுகளில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய இருக்கின்றன. பறக்கும் கார் என்று கதைகளிலும் திரைப்படங்களிலும்தான் பார்த்திருப்போம். இனி நிஜத்திலும் கார் பறக்கப் போகிறது. அதாவது ஒரு கார் சாலையிலும் ஓடும், வானிலும் பறக்கும். அவரவர் வீட்டில் இருந்து கிளம்பும் காரை, தேவையானபோது இறக்கையை நீட்டிப் பறக்க வைத்துக்கொள்ளலாம். தேவை இல்லாதபோது இறக்கையை மடக்கி, சாலையில் ஓட்டிக்கொள்ளலாம். விமானத்தைப் போல இந்த காருக்கு ரன்வே தேவை இல்லை. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த கார், விற்பனைக்கு வரும்போது சுமார் 1 கோடியே 82 லட்சம் ரூபாயாக இருக்கும் என்கிறார்கள்.
இனி வானிலும் ட்ராஃபிக்
ஜாம்ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா ஏரியில் ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலங்களில் பல கோடிக்கணக்கான பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் உருவாகின்றன. மனிதர்களால் அந்த இடத்தில் நிற்கவே முடியாது. அத்தனை அடர்த்தியாகப் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். ரீங்காரம் காதை அடைக்கும். இந்தப் பூச்சிகளை உணவாக்கிக்கொள்வதற்காகவே விக்டோரியா ஏரிக்கு பறவைகள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. சமீப காலமாக பூச்சிகளில் புரோட்டீன் சத்து அதிகம், அதை மனிதர்கள் உணவாக எடுத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
விக்டோரியா ஏரிப் பகுதியில் கிடைக்கும் பூச்சிகளைப் பிடித்து, கறுப்பு பர்கரை உருவாக்கி விட்டனர். இதற்காக பூச்சி வேட்டைகளில் அந்தப் பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 5 லட்சம் பூச்சிகளைப் பிடித்தால்தான் ஓரளவு பர்கர் செய்ய இயலும். மாட்டு இறைச்சி பர்கரைவிட பூச்சி பர்கரில் 7 மடங்கு அதிக சத்துகள் இருக்கின்றன. பூச்சிகளை வைத்து பர்கர் மட்டுமல்ல, இன்னும் பல சுவையான உணவுகளையும் உருவாக்கி வருகிறார்கள்.
பூச்சிகளில் உணவுகள் செய்வது எப்படி என்று புத்தகம் வர ஆரம்பித்துவிடும்…
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் ஸோவ். திடீரென்று இயந்திரத்துக்குள் இடது கை மாட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை. கை துண்டாக வந்துவிட்டது. உடனே ஸியாங்கியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸோவ். டாங் ஜுயு தலைமையிலான ஒரு குழு வேகமாகச் செயலில் இறங்கியது. வெட்டப்பட்ட கையை இணைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. துண்டான பகுதியில் ரத்தம் பாயாததால் செல்கள் இறந்துவிட்டன.
வெட்டப்பட்ட இரண்டு பகுதிகளையும் காயம் குணமடைந்து, புதிய செல்கள் உருவானால்தான் இணைக்க முடியும். அதுவரை துண்டான கையை காலில் வைத்து தைத்துவிட்டனர். கைக்கு இப்பொழுது ரத்தம் பாய்கிறது. விரல்கள் லேசாக அசைகின்றன. முற்றிலும் குணமான பிறகு, 10 மணி நேர அறுவை சிகிச்சையில் இரண்டு பகுதிகளையும் சேர்த்து இணைக்க இருக்கின்றனர். டாங் ஏற்கெனவே இதுபோன்ற ஒருவருக்கு வெற்றிகரமாகக் கையை இணைத்திருக்கிறார். 32 லட்சம் ரூபாய் செலவில் இந்த அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. செலவு முழுவதையும் ஸோவ் வேலை செய்த தொழிற்சாலை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை வெற்றிபெற வாழ்த்துகள்!
அலபாமாவில் வசிக்கும் 29 வயது ரென் லு யு, தன்னுடைய காதலியைத் தேடிக்கொண்டிருக்கிறார். இதற்காக ஒரு வெப்சைட் ஆரம்பித்திருக்கிறார். தகுந்த காதலியை அறிமுகம் செய்பவருக்கு 10 ஆயிரம் டாலர் பணம் தருவதாகச் சொல்கிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரென், கடந்த 12 மாதங்களாகப் பல பெண்களுடன் பழகி வந்தார். ஒருவரும் அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை. அதனால் தானே ஒரு வெப்சைட் ஆரம்பித்துவிட்டார். காதலியைத் தேடுவதற்காக நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. அதனால் இந்தப் பரிசை அறிவித்திருக்கிறேன். ஒருவர் எனக்கேற்ற காதலியை அறிமுகம் செய்து, நான் அந்தப் பெண்ணோடு 6 மாதங்கள் பழகிய பிறகு பிடித்திருந்தால், இந்தப் பணத்தை அறிமுகம் செய்பவருக்கு வழங்குவேன் என்கிறார் ரென்.
வெப்சைட் ஆரம்பித்த பிறகு நான் காதலியைத் தேடும் நேரம் மிச்சமாகிவிட்டது. அந்த நேரத்தை உருப்படியாகச் செலவு செய்கிறேன். ஒரு பெண் கிடைத்துவிட்டால் முதலில் சாட் செய்வேன், பிறகு ஸ்கைப் மூலம் பேசுவேன், இறுதிக் கட்டமாக நேரில் சந்திப்பேன். எனக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுப்பதில் புதிய வழிமுறையைக் கையாள்கிறேன். காதலியைக் கண்டுபிடித்து தருபவரின் பணி எவ்வளவு கஷ்டமானது என்பதை அறிந்ததால், 10 ஆயிரம் டாலர்களை வழங்குகிறேன் என்கிறார் ரென்.
ம்… ஒரு காதலி கிடைப்பது அத்தனை கடினமா என்ன?