இந்தோனேசியாவில் விமானப் படைக்கு சொந்தமான போக்கு வரத்து விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், மேடன் நகரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. இதில் 3 விமானிகள் 12 ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட 2 நிமிடத்தில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. கார்கள் தீப்பற்றி எரிந்தன.
இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு நேற்றுமுன்தினம் சுமார் 50 உடல்கள் வரை மீட்கப்பட்டன. நேற்று தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றது. இதில் மேலும் 92 உடல்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் பயணித்த அனைவருமே இறந்துவிட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் 51 ஆண்டுகள் பழையது. எனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. விமானம் முதலில் தாழ்வாக பறந்து பிறகு உயரமான கட்டிடங்களில் உரசி, பின்னர் விழுந்து நொறுங்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.