ஈரானுடன் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்படாமல் இருந்தால் மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு கோரும் வகையில் வெளிநாட்டு போரில் பங்கேற்றவர்களுக்கான கருத்தரங்கு பிட்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசும்போது ஒபாமா கூறியதாவது:
அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் முலம் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் மத்திய கிழக்கு பகுதியில் மற்றுமொரு போருக்கான அபாயம் ஏற்பட்டிருக்கும்.
விவாதத்தின்போது இந்த ஒப்பந்தத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த காலங்களில் இதுபோன்ற முடிவு தோல்வியில் முடிந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இவர்கள்தான் இராக் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அது முடிய சில மாதங்கள் ஆகும் என்றும் கூறினார்கள்.
இந்தப் போரின் மூலம் நாம் எவ்வளவு ரத்தம் சிந்தினோம் என்பதையும் எவ்வளவு செலவானது என்பதையும் நாம் அறிவோம். எனவே, நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிறந்த வழியாக இந்த ஒப்பந்தம் விளங்கும் என்று நம்புகிறேன்.
உலக நாடுகளை புறக்கணித்து தனித்து நிற்காமல் சர்வதேச நாடுகளை ஒருங்கிணைத்துக் கொண்டு பொதுவாக விளங்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பாணி இது. எதிரிகளாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல ராஜதந்திரம். அது பிரச்சினைக்கு அமைதி தீர்வு தரும்.
எனவே, இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம், வெளிநாட்டு போர் முனைகளில் பங்கேற்றவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைக்கு நல்ல அடையாளமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. இதுபற்றி மக்கள் மத்தியில் ஆதரவு திரட்ட வெள்ளை மாளிகை முயற்சி மேற்கொண்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஈரானுக் கும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக் கும் இடையே கடந்த வாரம் உடன்பாடு ஏற்பட்டது.